வரவு செலவு திட்டம் வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே தவிர பொருளாதார பிரச்சினையை தீர்க்க எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை - கலாநிதி ஹரினி அமரசூரிய - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 18, 2020

வரவு செலவு திட்டம் வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே தவிர பொருளாதார பிரச்சினையை தீர்க்க எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை - கலாநிதி ஹரினி அமரசூரிய

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

மக்களின் அன்றாட பிரச்சினையை தீர்த்துக் கொள்ள அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் எந்த தீர்வும் இல்லை. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவித்தாலும் அதனை எவ்வாறு மேற்கொள்வதென்ற பிரேரணை எதுவும் இல்லை. அதனால் அது கிடைக்குமா என்ற சந்தேகம் எழுகின்றது என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், வரவு செலவு திட்ட அறிக்கை வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதே தவிர, பொருளாதார பிரச்சினையை தீர்க்க அதில் எந்த வேலைத்திட்டமும் முன்வைக்கப்படவில்லை. பழைய வேலைத் திட்டங்களை புதிய வார்த்தைகளால் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. 

வார்த்தைகளாலோ இலக்கங்களாலோ பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. மாறாக புதிய வியூகங்களை ஏற்படுத்த வேண்டும்.

அத்துடன் அரசாங்கத்தின் வரி திருத்தத்தினால் சாதாரண வியாபாரிகளுக்கோ மக்களுக்கோ எந்த நன்மையும் இல்லை. மாறாக உயர் நிலையில் இருக்கும் வியாபாரிகள் மாத்திரமே இதில் நன்மை அடைந்திருக்கின்றனர். பொருளாதார கொள்கையொன்று செயற்படுகின்றதா என்பதை, மக்களின் வாழ்க்கையில் அது எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை வைத்தே கண்டுகொள்ள முடியும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என பிரேரிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியம் இல்லை என ஒருசில கம்பனிகள் தெரிவித்திருக்கின்ற செய்தி பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றது.

பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பிரேரணைகள் வெறும் வார்த்தையாக மாத்திரமே இருக்கும். மேலும் அரச ஊழியர்கள் வெறும் தொழில்களுக்காக வெளிநாடு செல்வதாக இருந்தால் அவர்களுக்கு 2 வருட விடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அப்படியானால் ஒரு குடும்பம் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய ஒரு தொழில் போதாது என்பதை அரசாங்கம் வரவு செலவு திட்டம் மூலம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அவ்வாறாயின் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் பிரதிபலன் என்ன?

அதனால் நாட்டில் ஒவ்வோரு வருடமும் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படுகின்ற போதும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் கிடைக்கப் பெறுவதில்லை.

புதிய லிபரல்வாத கொள்கையை அரசாங்கம் விமர்சித்தாலும் அழகான வேறு வார்த்தைகளால் தனவந்தர்களை போஷிக்கும் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை. அதனால் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரிப்பதே தவிர அதற்கான தீர்வுகள் கிடைப்பதில்லை.

அதனால் 30 தசாப்தங்களுக்கு முன் இருந்த பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்வின்றி இருந்து வருகின்றன. 2021 வருடத்துக்கான வரவு செலவு திட்டத்திலும் மக்களின் அன்றாட வாழ்வாதார பிரச்சினைக்குகூட எந்த தீர்வும் இல்லை. என்றார்.

No comments:

Post a Comment