குடும்பத்தின் வறுமையை குறைக்க முறையான பயிற்சி பெற்று சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் மிளிர வேண்டும் - யாழ் அரசாங்க அதிபர் மகேசன் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

குடும்பத்தின் வறுமையை குறைக்க முறையான பயிற்சி பெற்று சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் மிளிர வேண்டும் - யாழ் அரசாங்க அதிபர் மகேசன்

யாழ் மாவட்டத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தில் முதற்கட்டமாக இணைக்கப்பட்ட நீங்கள் குடும்பத்தின் வறுமை நிலையை இழிவளவாக்க முறையான பயிற்சிகளை பெற்று தொழில் வாண்மையுள்ள சிறந்த பிரஜைகளாக சமூகத்தில் மிளிர வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ற தொனிப்பொருளில் நாட்டின் வறுமைக்குட்பட்டோரிற்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதே தேசிய இளைஞர் படையணி ஆகும். இவ் எண்ணக்கருவின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட தேசிய இளைஞர் படையணிக்கான தலைமைத்துவ பயிற்சியின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) காலை 9 மணிக்கு நடைபெற்றது.

வட மாகாணத்தில் 306 பேர் முதற்கட்டமாக தேசிய இளைஞர் செயலணியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளார்கள். அவற்றுள் யாழ்ப்பாண மாவட்டத்தில் 94 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பல்நோக்கு செயலணியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைமைத்துவ பயிற்சி 14 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எமது ஜனாதிபதி பதவியேற்றவுடன் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக பல்நோக்கு அபிவிருத்தி செயலணியை உருவாக்கி வறுமையில் உள்ள இளைஞர் யுவதிகளிற்கு பயிற்சிகள் வழங்கி அவர்களை அரச வேலை வாய்ப்பில் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அரசாங்கம் மிகவும் வறியவர்களிற்காக இவ் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்குகிறது. வறுமை நிலையில் உள்ள இளைஞர், யுவதிகள் தங்கள் குடும்ப நிலையை கட்டியெழுப்புவதற்காக இவ் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பு இன்மையினால் பல்வேறு சமூகப் பிறழ்வுகள் சமூகத்தில் ஏற்படுகிறது ஆதலால் அரசாங்கம் இத் தொழில் வாய்ப்பு திட்டத்தினை கொண்டுவந்துள்ளது.

எனவே நீங்கள் இத்தொழில் வாய்ப்பு மூலம் பயிற்சி பெற்ற ஒரு தொழிலாளர்களாக மாறுதல் வேண்டும். மேலும் எமது இளைஞர்கள் வறுமை நிலையினால் மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று பல்வேறு துயரங்களுக்கு உள்ளாகிறார்கள். 

ஒவ்வொருவருக்கும் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பேதமில்லாது ஏதோவொரு திறமையுள்ளது ஆதலால் இப் பயிற்சி நெறி திட்டமிட்ட வகையில் முறையாக வழங்கப்படுகிறது. நீங்கள் தொழில் வாண்மையுள்ள தொழிலாளர்களாக மிளிர்ந்து வறுமையை உங்கள் குடும்பத்திலிருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad