வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பில் மக்களை விழிப்பாக செயற்படுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பில் மக்களை விழிப்பாக செயற்படுமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவிப்பு

வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் கருத்துதெரிவிக்கும் இவ்வாறு குறிப்பிட்டார். 

காரைநகர் பிரதேச செயலக பிரிவில் கொரோனா தொற்று உள்ளவருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர். இதற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

காரைநகரில் தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடைய 36 குடும்பங்களுக்கு மேல் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ் நகரப்பகுதி உட்பட சில வர்த்தக நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்தவர், தான் கொழும்பிலிருந்து வருகை தந்ததை மறைத்து 3 நாட்களுக்கு மேல் பல இடங்களில் நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

காரைநகர் பிரதேசத்தில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பிரதேச சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

அத்துடன் வேலணை பகுதியில் வீதி திருத்த பணிக்காக தென்னிலங்கையிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரோடு தொடர்புடையவர்கள் தொடர்பிலும் சுகாதாரப் பிரிவினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

எனினும் பொதுமக்கள் தற்போதைய சூழ்நிலையை புரிந்துகொண்டு குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பில் சுகாதார பிரிவினர்களுக்கு தகவலினை வழங்கி கொரோனா தொற்று குடாநாட்டில் மேலும் பரவாமல் இருப்பதற்கு ஒத்துழைக்க வேண்டுமென தெரிவித்தார்.

குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து யாழ் குடா நாட்டுக்குள் வருவோரும் இங்கு வந்தவுடன் தமது பதிவுகளை சுகாதார பிரிவினரிடம் மேற்கொண்டு சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment