மாவனெல்ல பிரதேச சபை கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதித்தது நீதிமன்றம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 10, 2020

மாவனெல்ல பிரதேச சபை கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதித்தது நீதிமன்றம்

மாவனெல்ல பிரதேச சபை குழுக்கூட்டத்தை எதிர்வரும் ஒரு வாரம் வரையில் நடத்தக்கூடாது என்று மாவனெல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாவனெல்ல பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அதனை கருத்திற் கொள்ளாமல் மாவனெல்ல பிரதேச சபை கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய, பொலிஸார் அது தொடர்பில் மாவனெல்ல நீதிவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் இந்த செயற்படானது 1979 ஆம் ஆண்டின் 15 ஆவது இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் 106 ஆவது சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்திற்கமையவும், கடந்த மாதம் 15 ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமும் குற்றச்செயல் என்பதை நீதிமன்றத்தில் விளக்கியுள்ளனர்.

மேலும், வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இவ்வாறான கூட்டங்களை நடத்துவதன் ஊடாக வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. இதேவேளை இது சட்டவிரோதமான செயற்பாடு என்பதையும் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். 

பின்னர் இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மாவனெல்ல நீதிவான் உபுல் ராஜகருணா எதிர்வரும் ஒருவாரம் வரை கூட்டத்தை நடத்தக்கூடாது என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு தொடர்பில் பிரதேச செயலகத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு அறிவித்தல் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், வைரஸ் பரவலை தடுப்பதற்காக செயற்பட்டு வரும் நபர்களில் பிரதேச சபையினரும் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இத்தகைய பொறுப்பு வாய்ந்த தரப்பினரே இவ்வாறான கூட்டங்களை ஏற்பாடு செய்வதென்பது கவலையளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad