அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறுப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரச வழக்குத் தொடுநர்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி அளித்திருப்பதாக நீதித் திணைக்களத்தின் மூத்த அதிகாரியான வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையான - நம்பகமான கூற்றுகள் தொடர்பில் மாத்திரமே விசாரணைகள் நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விசாரணைகள் பொதுவாக தனிப்பட்ட மாநிலங்கள் அளவில் இருந்தபோதும் அது வலுவான மற்றும் விரைவான தீர்ப்பாக இருக்காது என்று பார் சுட்டிக்காட்டினார்.

கடந்த நவம்பர் 3 ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக கணிக்கப்பட்டிருப்பதை பதவியில் உள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். தேர்தல் மோசடி இடம்பெற்றதாக அதற்கு அவர் ஆதாரம் இன்றி குற்றம் சாட்டி வருகிறார்.

பைடனின் வெற்றியை உறுதி செய்து பென்சில்வேனிய மாநிலத்தால் வழங்கப்படும் சான்றை தடுக்கும் அவசர தடை உத்தரவு ஒன்றுக்கு டிரம்ப் பிரசார குழு முயன்று வருகிறது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவைப்படும் 270 தேர்தல் தொகுதிகளை ஜனநாயகக் கட்சியின் பைடன் கைப்பற்றியதாக கணிப்புகள் மூலம் கடந்த சனிக்கிழமை உறுதியானது.

இதற்கு எதிராக சட்ட நவடிக்கை எடுப்பதாக டிரம்பின் பேச்சாளர் கூறி இருந்தார். இந்த தேர்தல் இன்னும் முடியவில்லை என்று வெள்ளை மாளிகையில் வைத்து அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்ட நடவடிக்கைகளுக்காக டிரம்ப் ஆதரவு அதிகாரிகள் நாட்டின் மிகச் சிறந்த வழக்கறிஞர்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சில அஞ்சல் வாக்குகளை எண்ணிக்கைக்குள் கொண்டு வராமல் இருப்பதே அவரின் நோக்கமாகும். இது முதலில் அந்தந்த மாநிலங்களின் நீதிமன்றங்களிலும் பின்னர் உச்ச நீதி மன்றத்திலும் விசாரணைக்கு வரும்.

ஆனால், இது போன்ற விவகாரங்களால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டிரம்ப் தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க, சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் மேற்கொள்ளப்படலாம் என்றும், ஆனால் இது முடிவுகளைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment