புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள், சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்? - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகள், சமூகங்களின் அந்தஸ்தை அர்த்தப்படுத்துவது யார்?

சுஐப் எம். காசிம்

ராஜபக்ஷக்கள் தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள கையோடு, வரவு செலவுத் திட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவேற்ற உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் குறைகளைத் தொட்டுக் காட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களுக்கு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தயாராகிறது. 

இதன் மற்றொரு வாக்குறுதிதான் புதிய அரசியலமைப்பு. இது கொண்டு வரப்படும் என்று கூறித்தான், ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெரு வெற்றியீட்டியது. சிறுபான்மைச் சமூகங்களிலுள்ள அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகளின் அரசியல் கோரிக்கைகளுக்குப் பலமளிக்காத வகையில்தான், புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் என்பதைத் தூக்கிப் பிடித்ததால், தென்னிலங்கையில் கிடைத்த வெற்றியை ராஜபக்ஷக்கள் மறக்கப் போவதில்லை. எனவே, இதையும் இந்த அரசாங்கம் சாதிக்கவே செய்யும். 

பாராளுமன்றத்தில் உள்ள பலத்தால், எதையும் செய்வதற்குத் தயாராகவுள்ள இந்த அரசு, யாரைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறது. "பெரும்பான்மை, சிறுபான்மை என்று இங்கில்லை. நாட்டை நேசிப்போர், நேசிக்காதோர்" இரண்டு வகையினரே இலங்கையில் உள்ளனர். இந்த அடிப்படையிலே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பு. ஏனெனில், சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள், நாட்டின் ஆள்புல எல்லைக்கு ஆபத்தாக அமையும் என்பதும் இன, மத மற்றும் கலாசார நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறான சட்டங்கள், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்தைப் பலப்படுத்தும் என்பதும் இந்த அரசின் சில சக்திகளின் நம்பிக்கை. 

நாட்டிலுள்ள பிரச்சினைகள் அனைத்துக்கும் பொருளாதாரமே காரணம் என்ற ஜனாதிபதியின் கருத்துக்களும் இந்நம்பிக்கைகளை வாழ வைக்கிறது. அரசாங்கத்தின் இந்த, கருத்துக்கள்தான் இன்னும் சிலரை சந்தேகப்படுத்துகிறது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமைகள் (டக்ளஸ்தேவானந்தா, அதாஉல்லா தவிர) ஒரே அணியில் அணிதிரண்டு ஏற்படுத்திய அலைகளால், தென்னிலங்கையில் மிகப் பெரிய அமர்க்களமும் அச்சமும் ஏற்பட்டிருந்தது. ராஜபக்ஷக்களை வீழ்த்துவதற்கான அலையில், அதிகளவு சிறுபான்மையினர் மகிழ்ச்சியுற்றதால் ஏற்பட்ட அச்சமாகவே, தென்னிலங்கையில் இது தென்பட்டது. இதைத் தணிப்பதற்குப் போடப்பட்ட எறிகாய்தான் புதிய அரசியலமைப்புக் கோஷம். "சம்பந்தன் வடக்கை கோருகிறார், ஹக்கீம் கிழக்கை கேட்கிறார் இவற்றைப் பிரித்தால், எண்பது வீதமான சிங்களவர்கள் எங்கே வாழ்வது. "25 வீதமான சிறுபான்மையினர் 75 வீதமான சிங்களவர்களின் தலை எழுத்தை தீர்மானிப்பதா"? என்ற ராஜபக்ஷக்களின் 2015 பிரச்சாரங்களின் பின்புலம்தான் புதிய அரசியலமைப்பு சிந்தனைக்கு அத்திவாரமிட்டது. அதற்குப் பின்னரான நல்லாட்சி அரசின் சம்பவங்கள், இந்த அத்திவாரத்தைப் பலப்படுத்தியது. எல்லாச் சமூகத்தவருக்கும் புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டாலும், இத் தேவைகளின் வடிவங்கள் வேறுபடுகின்றன.

சுமார் 42 வருட காலமாக, இம்முயற்சிகளை இழுபறிக்குள்ளாக்குவதும், இத்தேவைகளின் வெவ்வேறு வடிவங்கள்தான். இது மாத்திரமல்ல, இதற்கான முயற்சிகள் கைகூடி வந்த காலங்களிலிருந்த அரசாங்கங்களின் பலப் பற்றாக்குறைகளும் இதில் பெருமளவு பங்களித்திருந்தன. சந்திரிக்கா காலத்து முயற்சிகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதும், நல்லாட்சி அரசில், இம்முயற்சிகள் நலிவடைந்ததும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லாத பலப்பற்றாக் குறைகளால்தான். ஆனால், இந்த அரசாங்கத்தில் இந்நிலைமைகள் இல்லை. நிச்சயம் இது நிறைவேறும். யாரால், யாருக்காக என்பதுதான் இன்றுள்ள கேள்விகள். 

புதிய அரசியலமைப்பை வரைவதற்கான ரொமேஷ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய நிபுணத்துவக் குழு, மும்முரமாகக் களப்பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களிடமிருந்தும் கருத்துக்கள், முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 30 உடன் கால அவகாசம் நிறைவடையவுள்ள நிலையில், மேலும் நீடிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் தமிழ், முஸ்லிம் சமூகங்களில், இது தொடர்பாகச் செயற்பட்டவர்கள் யார்? 

"ஒரே நாடு, ஒரே சட்டம்" என்று ஜனாதிபதிதானே கூறிவிட்டார், இதற்குள் எதற்கு கருத்து என்று சிறுபான்மையினர் ஒதுங்கி விடவும் முடியாது. வரலாற்று ஆவணங்களுக்காக தத்தமது சமூகங்களின் அரசியல் அபிலாஷைகளை அனுப்பியே ஆக வேண்டியுள்ளது. 

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை அடைவதற்கான கோரிக்கைகளை அடிப்படைவாதமாகவோ, பிரிவினைவாதமாகவோ காட்டுவது யார்? காட்ட முனைவது யார்? என்பவற்றுக்கும் இந்த ஆவணங்கள்தான் சான்று. 

புதிய அரசியலமைப்புக்கான சிறுபான்மை சமூகங்களின் பரிந்துரைகள், வெளிநாடுகளின் பார்வைகளுக்குப் பலமாகவோ? அல்லது பரிதாபமாகவோ?படுவதும் நிறுவனமயப்படுத்தலுக்கான வெற்றிகளே. அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸ் இந்தியப் பூர்வீகமுள்ள சிறுபான்மையினத்தவராக இருப்பதும், அவரின் செயலாளராக யாழ்ப்பாணப் பின்னணியுள்ள லக்ஷ்மி ரோஹிணி ரவீந்திரன் இருப்பதும் தமிழர் தரப்பு அரசியலில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. எதிர்வரும் மார்ச்சில் இல்லாவிடினும் ஜூன் மாத ஜெனிவா அமர்வுகளில் எவற்றையாவது பேசலாம் என்பதுதான் தமிழர் தரப்பு நம்பிக்கை. மேய்ப்பானில்லாத மந்தைகளாகத் தமது அரசியல் செல்லக் கூடாதென்பதில் தமிழ் தரப்புக்குள்ள அக்கறை வரவேற்புக்குரியதுதான். பாராளுமன்றப் பதவிகள் எதற்கு? ஓயாத உழைப்பும் அயராத அர்ப்பணிப்பும், சோரம் போகாத சிந்தனைகளும் தமிழரைக் கரையேற்றும் என்றுதான் தமிழ்த் தேசியம் செயலாற்றுகிறது. புதிய அரசியலமைப்பில், மாகாண சபைகள் நடத்தப்படுமானால், அதையும் சமூகம் சார்புக் கொள்கையில் எதிர்கொள்ள மாவையைத் தயாரிக்கிறது தமிழ் தேசியம். 

ஆனால், மூன்றாம் தேசியம் எதைச் செய்கிறது? ஆகக் குறைந்தது மாகாண சபைத் தேர்தலிலாவது சமூகப் பிரதிநிதித்துவங்களைப் பாதுகாப்பது பற்றிச் சிந்தித்ததாகவும் தெரியவில்லை. மூன்றாந் தேசியத்தைப் பொறுத்தவரை, பிரதிநிதித்துவத்தைப் பலப்படுத்துவதை விடவும் உள்ளதையாவது, பாதுகாக்க முன்னின்று உழைப்பதே முதன்மைப்பட்டுள்ளது. இதற்கான கருத்தாடல்கள், சந்திப்புக்கள் இதுவரை வறிதாகவே உள்ளன. பிரிந்துபோன சகல தலைமைகளையும் ஒன்றிணைக்க, ஒரு களத்தில் குதிக்க வைக்க சமூகத்தின் சிவில் அமைப்புக்களாவது முன்வரவில்லை. "ஒரேநாடு, ஒரே சட்டம்" என்ற அரசியல் சித்தாந்தத்திற்குள் புதிய அரசியலமைப்பு வரையப்பட்டால், ஷரீஆச் சட்டம் மற்றும் திருமணச் சட்டங்களை எவ்வாறு பாதுகாப்பது? இவற்றில் மாத்திரம் நெகிழ்வுப் போக்கிற்கு புதிய அரசியலமைப்பு இடமளித்தால், எதிர்காலத்தில் இவற்றைப் பலப்படுத்தச் செய்ய வேண்டிய முன்மொழிவுகளாவது, புதிய அரசியலமைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டதா? இத்தேசியத்தைப் பொறுத்தவரை அனைத்தும் துலங்கா வானமாகவே, இன்று வரை காட்சியளிக்கிறது. 

இன்னும் அரசியலில், சாதிக்க இத்தேசியத்துக்கு எத்தனையோ உள்ளன. தொகுதி வாரித் தேர்தல் முறையில், இந்த மூன்றாம் தேசியம் அடையாளம் இழக்கும் ஆபத்துக்களே அதிகம். மாகாண சபைத் தேர்தலில் தெரிவாகும் சமூகப் பிரதிநிதித்துவங்களை, இலங்கை அரசியலில் தென்பட வைத்துத்தான், மூன்றாம் தேசியத்தின் அடையாளத்தை அம்பலப்படுத்த முடியும் என்பதையும் இச் சமூக முன்னோடிகள் புரிதல் அவசியம். கொரோனாத் தொற்று ஜனாஸாக்களை எரித்தலிலிருந்து பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், இத்தேசியத்தின் மன அலைகளை அதிரவிட்டுள்ள சூழலிது. எனவே, இது உட்பட சமய, அரசியல், சமூக அனைத்து அபிலாஷைகளையும் வென்றெடுக்கப் புறப்படப் போவது யார்? எப்போது? எப்படி?

No comments:

Post a Comment