கொரோனா வைரஸின் தன்மை மாற்றமடைந்துள்ளதா என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது - விசேட வைத்தியர் சுதத் சமரவீர - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

கொரோனா வைரஸின் தன்மை மாற்றமடைந்துள்ளதா என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது - விசேட வைத்தியர் சுதத் சமரவீர

(எம்.மனோசித்ரா) 

கொரோனா வைரஸின் தன்மை மாற்றமடைந்துள்ளதா என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. இலங்கையில் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் மேலும் விரைவாக தொற்றாளர்களை இனங்காண முடியும். எனினும் இதன் காரணமாக பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடையாது. குறுகிய காலத்தில் நாளொன்றுக்கு 20,000 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதே எமது இலக்காகும் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், மினுவாங்கொடை கொத்தணியின் பின்னர் உருவாகிய புதிய கொத்தணிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவு குறைவடைந்துள்ளது. தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அல்லது இதற்கு முன்னரே தொற்றுக்கு உள்ளானவர்களாவர். 

எனவே அவர்களில் காணப்படும் வைரஸின் அளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. எனவே எதிர்வரும் இரு வாரங்களில் தற்போதுள்ளதை விடவும் அளவு மேலும் குறைவடையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையில் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதால் மேலும் விரைவாக தொற்றாளர்களை இனங்காண முடியும். எனினும் இதன் காரணமாக பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவு குறைவடையாது. குறுகிய காலத்தில் நாளொன்றுக்கு 20,000 பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதே எமது இலக்காகும்.

வைரஸ் உருவாக்கம் என்பது பிரதிகள் எடுப்பதைப் போன்றதாகும். வைரஸ் உடலினுள் சென்றதன் பின்னர் புரோட்டினைப் பயன்படுத்தி அதன் பிரதிகளை உருவாக்கும். இதன் காரணமாக வைரசுடைய தன்மையும் மாறுபடக் கூடும். அதற்கமைய வைரஸ் விரைவில் அழியக் கூடிய நிலைமையும் ஏற்படும். எனவேதான் கொரோனா வைரஸின் தன்மை மாற்றமடைந்துள்ளதா என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad