ரிஷாட் பதியுதீன் 50 கோடியை தர வேண்டும், இன்னும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் - அமைச்சர் சி.பி. ரத்னாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

ரிஷாட் பதியுதீன் 50 கோடியை தர வேண்டும், இன்னும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வரும் - அமைச்சர் சி.பி. ரத்னாயக்க

வில்பத்து வனத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு ரிஷாட் பதியுதீன் 50 கோடி ரூபாவை வழங்க வேண்டும் என்று வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

பூண்டுலோயா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியை அமைச்சர் சிபி ரத்னாயக்க இன்று (22 ) திறந்து வைத்தார். இந்நிகழ்வின் பின்னர் அமைச்சர் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டார்.

இதன்போது மீள்குடியேற்ற நடவடிக்கையின் போது பசில் ராஜபக்சவும் மரங்களை வெட்டினார் என ரிஷாட் பதியுதீனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "ரிஷாட் பதியுதீன் என்பவர் நீதிபதி கிடையாது. வில்பத்து விவகாரத்துக்கு அவரே பொறுப்புக்கூற வேண்டும். அவர் தொடர்பிலேயே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

எனவே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் அவர் செயற்படக்கூடாது என்பதுடன் மற்றையவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்கும் முற்படக்கூடாது. வில்பத்து வனத்தை மீளக்கட்டியெழுப்ப 50 கோடி ரூபாவை செலுத்துமாறு கோருகின்றோம்.

மீள்குடியேற்றத்தின் போது பசில் ராஜபக்ச சட்டபூர்வமாகவே செயற்பட்டுள்ளார். வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், திவிநெகும, மகநெகும என நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்களையே அவர் முன்னெடுத்தார். 

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ரிஷாட் பதியுதீன் என்ன செய்தார், அவரின் குடும்ப பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக 2 ஆயிரம் மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் எங்கே மீள்குடியேற்றம் நடந்தது. அது தொடர்பான தகவல்களும் வெளிவரும் என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment