கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு போதுமானதல்ல. எனவே அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உரிய கொடுப்பனவையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வலியுறுத்திய அவர் மேலும் கூறுகையில், தற்போது கொழும்பு நகரில் கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் பொரளையை அண்மித்த பகுதிகள் மிகவும் கவலைக்கிடமான நிலையிலுள்ளன. கொவிட் அச்சுறுத்தலால் இப்பகுதிகளில் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் அற்றுப் போயுள்ளது.
இதனால் அவர்கள் தமக்கு தேவையான உணவைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே இங்குள்ள மக்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றேன்.
தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு எதற்கும் போதாததாகும். இங்குள்ள மக்கள் தற்போது வீதியில் இரங்கி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டம் தமது அடிப்படை தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாமல் முன்னெடுக்கும் போராட்டமேயன்றி அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டம் அல்ல.
கொவிட்டுடன் போராட வேண்டிய தேவையில்லை. போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அளவிற்கு அரசாங்கம் செயற்பட வேண்டிய அவசியமும் இல்லை.
எனவே கொழும்பில் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுமாறு வலியுறுத்துகின்றோம். அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான கொடுப்பனவை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment