கொரோனா பரவல் 4 ஆம் கட்டத்திற்குச் சென்றால் கடும் ஆபத்து : GMOA வலியுறுத்தியுள்ள விடயங்களுக்கு இனங்குகிறோம் - சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 10, 2020

கொரோனா பரவல் 4 ஆம் கட்டத்திற்குச் சென்றால் கடும் ஆபத்து : GMOA வலியுறுத்தியுள்ள விடயங்களுக்கு இனங்குகிறோம் - சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர்

(எம்.மனோசித்ரா)

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும், கொவிட் பரவலில் இலங்கை மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் பொறுப்பற்று செயற்படுவோமானால் நான்காம் கட்டத்தை நோக்கி செல்ல வேண்டியேற்படும். அவ்வாறு நான்காம் கட்டத்திற்கு சென்றால் அது மிகவும் அபாயமானதாகும் என்று சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

அத்தோடு வீடுகளிலேயே உயிரிழக்கின்ற கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கான காரணத்தை அறிக்கையிடுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உள்ளிட்டவை வலியுறுத்தியுள்ள விடயங்களுக்கு தாமும் இனங்குவதாகவும் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்தார்.

மேலும், அண்மையில் சில முதியவர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளிலேயே உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சமூகத்தில் வந்து நடமாடவில்லை. அவ்வாறெனில் அவர்களது வீடுகளிலுள்ளவர்களாலேயே முதியோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும்.

அத்தோடு அதிகளவானோர் ஒரே இடத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு தொற்று ஏற்படக்கூடும். எனவே ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் அலுவலகங்கள் என்பவற்றிற்கு தொழிலுக்கு செல்பவர்கள் அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள் மாத்திரமின்றி அலுவலக நிர்வாகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

தற்போது வைரஸ் பரவல் வேகம் அதிகம் என்பதால் 1 தொடக்கம் 2 மீற்றர் இடைவெளியை பேண வேண்டியது அவசியமாகும். கொரோனா வைரஸ் பரவலில் இலங்கை மூன்றாம் கட்டத்தில் உள்ளது என்பதை தொற்று நோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதை யாரும் மறந்துவிடக் கூடாது.

4 ஆம் கட்டத்திற்கு சென்று விட்டால் அது மிகவும் அபாயமானதாகும். 4 ஆம் கட்டத்தினையடுத்து எச்சரிக்கை மிக்க பல விடயங்கள் உள்ளது என்பதை உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறிருப்பினும் இலங்கையில் தற்போதும் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே உள்ளது என்பதால் சுகாதாரத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுவதே சிறந்தது. ஜப்பான், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் வாழ ஆரம்பித்துள்ளன என்றார்.

No comments:

Post a Comment