ஓட்டமாவடி, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 373 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு - Dr. எம்.எச்.எம்.தாரிக் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 15, 2020

ஓட்டமாவடி, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 373 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு - Dr. எம்.எச்.எம்.தாரிக்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி, கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்துக் காணப்படும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில், வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொள்ளல், டெங்கு புகை விசிறல், விழிப்புணர்வு ஏற்படுத்தல் தொடர்பில் டெங்கொழிப்பு குழுவினருடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன் பிற்பாடு வீடு வீடாகச் சென்று டெங்கு பரிசோதனை நடவடிக்கையின் போது டெங்கு நோய் பரவும் வகையில் நீர்த்தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதற்கு பிறகு இவ்வாறு சுத்தமில்லாமல் இருந்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படுமென்றும் எச்சரிக்கப்பட்டனர்.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற இவ்வேலைத்திட்டத்தில் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 13ம் திகதி வரை 373 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெண்ணொருவர் மரணித்துள்ளதாகவும், இந்த வாரம் 44 பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரிப்பினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, சமூகமட்ட அமைப்புக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகசுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad