மலையகத்துக்கு சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - பொலிஸ், இராணுவம் 24 மணி நேரமும் சோதனை - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

மலையகத்துக்கு சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் - பொலிஸ், இராணுவம் 24 மணி நேரமும் சோதனை

மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு இன்று (09) வருகை தந்த வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பியனுப்பட்டனர்.

மேல் மாகாணத்திலும் நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் பிறப்பிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று காலை (09) 5 மணிக்கு தளர்த்தப்பட்டது. எனினும், வெளி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்துகொள்ளுமாறு மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

அதேபோல மேல் மாகாணம் உட்பட கொரோனா வைரஸ் பரவக்கூடிய பகுதிகளில் உள்ளவர்கள், தீபாவளி பண்டிகைக்காக மலையக பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வருகைதர வேண்டாம் எனவும், அவ்வாறு வந்தால் குடும்பத்தோடு சுய தனிமைக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் வெளியிடங்களில் இருந்து மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வருபவர்களை தடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து கூட்டு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை தியகல, கலுகல பகுதியிலும், ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பகத்தொழுவ பகுதியிலும் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வீதிகள் ஊடாக வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்படும். இந்நிலையில் அநாவசியமான முறையில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு இன்று (09) செல்ல முற்பட்ட வாகனங்களும், அதில் பயணித்தவர்களும் திருப்பி அனுப்பட்டனர்.

அத்துடன், வருபவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்படுகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருபவர்களை அவர்கள் தங்கி இருக்கும் இடத்திலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad