ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழத்திற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் உள்ள காபுல் பல்கலைக்கழகத்தில் இன்று (02) புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் ஆப்கானிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் பங்கேற்பதாக இருந்தது. இதனால், நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி நடைபெற்ற பல்கலைக்கழகத்திற்கு இன்று மாலை துப்பாக்கி மற்றும் வெடி குண்டுகளுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த மாணவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் மாணவர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், பல்கலைக்கழக தாக்குதலில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என ஆப்கான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சண்டை தொடர்ந்து நீடித்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்பான தெளிவான தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
இதற்கிடையில், இந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளபோதும் தாக்குதலை தலிபான்கள் அல்லது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment