2027ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு நிகராக ராணுவத்தை நவீனப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
உலக வல்லரசுகளின் முதல்வனாக அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த அமெரிக்காவுக்கு ஒரு போட்டியாளராக ஆசியாவில் எழுச்சி பெற்று வருகிறது, சீனா.
அமெரிக்காவுக்கு தாங்களும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து, சர்வதேச அரங்கில் தாங்களும் முதல்வனாக இருப்போம் என்பதை நிலைநாட்டுவதற்காக சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் அது எடுத்து வைக்கும் அடிகள் அனைத்தும் அமெரிக்காவை மிஞ்ச வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருக்கிறது.
இந்த போக்கினாலேயே அமெரிக்காவும், சீனாவும் அடிக்கடி மோதல் போக்கையும் கடைப்பிடித்து வருகின்றன. பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் சமீபத்திய ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது.
பொருளாதாரம், வர்த்தகம் என பிற துறைகளில் அமெரிக்காவுக்கு நிகராகவோ அல்லது அதற்கு மேலாகவோ சீனா முன்னேறினாலும், படைபலத்தில் அமெரிக்காவை மிஞ்ச முடியாத நிலைதான் நீடிக்கிறது. அடுத்த தலைமுறை ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களுடன் மிகவும் நவீன முறையில் விளங்கும் அமெரிக்க ராணுவத்தை ஒப்பிடுகையில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் பின்தங்கியே இருக்கிறது.
எனவே அமெரிக்க ராணுவத்துக்கு நிகராக சீனாவின் ராணுவத்தையும் நவீனப்படுத்துவதற்கு அந்த நாடு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக சீன ராணுவம் தோற்றுவிக்கப்பட்ட நூற்றாண்டான 2027ஆம் ஆண்டுக்குள் அதை நவீனப்படுத்தி மேம்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.
அந்த நாட்டின் ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு சமீபத்தில் நடந்தது. ஜனாதிபதி ஜின்பிங் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் அவர் கொண்டு வந்த, 2021-2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் தேசிய பொருளாதார, சமூக வளர்ச்சி திட்டங்களுடன், 2035ஆம் ஆண்டு வரையிலான நீண்ட கால திட்டங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் குறிப்பாக, சீன ராணுவத்தை மேம்படுத்தும் ஜின்பிங்கின் திட்டமும் இறுதி செய்யப்பட்டது.
அதன்படி 2027ஆம் ஆண்டுக்குள் முழுமையான நவீன ராணுவம் ஒன்றை சீனா அமைக்கும். குறிப்பாக அமெரிக்காவுக்கு இணையாக சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் மேம்படுத்தப்படும்.
தேசிய பாதுகாப்பு மற்றும் எதிர்கால தேசிய பாதுகாப்பு தேவைகளை கருத்தில் கொண்டும், நாட்டின் தேசிய இறையாண்மை, மேற்கு பசிபிக் பிராந்தியங்களில் எழும் மேலாதிக்க பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டும், நாட்டின் சர்வதேச பொருளாதார இருப்பு வளரும்போது, அதன் வளர்ச்சி நலன்களை பாதுகாப்பதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக கம்யூனிஸ்டு கட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
சீன ராணுவத்தின் இந்த நூற்றாண்டு இலக்கு அமல்படுத்தப்படும் போது, உலக அளவில் நவீனத்துவம் பெற்றதாகவும், அமெரிக்காவின் வலிமைக்கு நிகராகவும் சீன ராணுவம் இருக்கும் என சீன பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment