யாழ். மாவட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு - தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள் - விவசாய, வாழ்வாதார செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை - பொதுமக்கள் அனைவரும் விழிப்பாக செயற்படுங்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, November 9, 2020

யாழ். மாவட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு - தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள் - விவசாய, வாழ்வாதார செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு இல்லை - பொதுமக்கள் அனைவரும் விழிப்பாக செயற்படுங்கள்

பொதுமக்கள் தேவையற்ற விதத்தில் மேல் மாகாணத்துக்கான பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலைமை இறுதியாக அல்வாய் பகுதியில் மூன்று பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இன்றைய நிலையில் யாழ்ப்பாணத்தில் 1419 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் மூன்று கிராமங்கள் முடக்கல் நிலையில் காணப்படுகின்றது. அங்கு தற்பொழுது பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, முடிவுகளைப் பொறுத்து மிக விரைவில் அந்த மூன்று இடங்களும் விடுவிக்கப்படவுள்ளன. அதாவது கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜகிராமம் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பாசையூர் மற்றும் திரு நகர் பகுதி தற்பொழுது முடக்கல் நிலையில் காணப்படுகின்றன. 

இதனைவிட அரசாங்கத்தின் அறிவிப்பின்படி தூர இடங்களுக்கான போக்குவரத்து தற்பொழுது வழமைக்கு திரும்பியுள்ளது ஏற்கனவே மட்டுப்படுத்தப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போக்குவரத்தில் மிக அத்தியாவசியமான தேவையுடையோர் மாத்திரம் பயணம் செய்யுமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். ஏனென்றால் கொழும்பு அல்லது மேல் மாகாணம் போன்ற இடங்கள் அபாயமான வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசியமான தேவையுடையவர்கள் மட்டும் இந்த போக்குவரத்தினை பயன்படுத்தவும் அதே நேரத்தில் வட மாகாணத்துக்குள்ளான போக்குவரத்தில் எந்தவிதமான தடையும் இல்லை. எனினும் மிகவும் விழிப்பாக தமது பயணங்களை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை கேட்டுக்கொள்கின்றோம் .

பேருந்துகளில் ஆசனங்களுக்கு அமைவாக பயணிகள் ஏற்றப்பட வேண்டும் அத்தோடு சுகாதார நடைமுறைகள் பின்பற்றி பயணிகள் ஏற்றப்பட வேண்டும்.

அலுவலங்கள் மற்றும் நிறுவனங்களில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தமது வழமையான செயற்பாட்டை பின்பற்றுவதற்கு தடையில்லை.

குறிப்பாக உத்தியோகத்தர்கள் தங்களுடைய சொந்த போக்குவரத்தினை பின்பற்றினால் சிறந்தது அப்படி இல்லாவிட்டால் அவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம்.

உயர்தரப்பரீட்சை முடிவடைந்துவிட்டது பாடசாலைகள் மீளத் திறப்பது பற்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பொது நிகழ்வுகள் ஆலய வழிபாடுகள் ஏற்கனவே அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டதாக செயற்படுத்தப்படல் வேண்டும்.

பொதுமக்கள் அத்தியாவசிய செயற்பாடுகளிற்கு மாத்திரம் வீட்டிலிருந்து வெளியில் வருமாறு கேட்டுக் கொள்கிறோம் ஏனைய அநாவசியமான பயணங்களை தவிர்த்தல் நல்லது.

அதே நேரத்தில் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ அல்லது தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ள எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விடுக்கப்படவில்லை.

தற்பொழுது மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதன் காரணமாக வர்த்தகர்கள் தங்களுக்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கும் அதேபோல அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய செல்வதற்கும் கட்டுப்பாடு இல்லை.

அவ்வாறு செல்பவர்கள் மிகவும் சுகாதார நடைமுறையை பின்பற்றி செயற்படவேண்டும். அவர்களுக்குரிய சுகாதார நடைமுறைகள் பற்றி சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அதனை செயற்படுத்துவார்கள்.

குறிப்பாக மேல் மாகாணத்திற்கு செல்பவர்கள் தங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்த்து தேவையான கடமைகளை மாத்திரம் முடித்துவிட்டு வருவது மிகவும் சிறந்தது.

கூடுமானவரை தொற்றுநீக்கம் முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கி திரவத்தை பயன்படுத்தி கைகளை கழுவுதல் போன்ற செயற்பாடுகளை செய்வதன் மூலம் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த தொற்று வீதம் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. ஆகவே பொதுமக்கள் தங்களுடைய நாளாந்த வாழ்விலும் இந்த கொரோனா நிலைமை யினை அனுசரித்து தங்களுடைய நாளாந்த செயற்பாட்டை செயற்படுத்தும் வகையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுய பாதுகாப்பு தங்களுடைய குடும்பத்தினுடைய பாதுகாப்பு சமூக பாதுகாப்பு என்ற அடிப்படையில் அன்றாடச் செயற்பாடுகளை பொதுமக்கள் மேற்கொண்டால் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள் அத்தோடு பொதுமக்கள் அனைவரும் விழிப்பாக செயற்பட வேண்டியது அவசியமானதாகும்.

அரசாங்கத்தினால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கான உணவு பொதி அவர்களுடைய வீடுகளுக்கு கொண்டு சென்றும் கையளிக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர்களுக்கு 7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு அது வழங்கப்பட்டு வருகின்றது. ஒரு கிழமைக்கு 5000 ரூபா வீதம் இரண்டு கிழமைகளுக்கு அவர்களுக்குரிய உணவுப் பொதிகள் வழங்குவதற்கு ரிய ஏற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அரச அதிபர்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad