இலங்கையில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் - 89 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் : முழு விபரம் இதோ - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

இலங்கையில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் - 89 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் : முழு விபரம் இதோ

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவலில் முதலாவது அலையை இலங்கை வெற்றிகரமாக கையாண்ட போதிலும் இரண்டாம் அலை ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதுவரையில் நாடளாவிய ரீதியில் சுமார் 11 ஆயிரம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதில் இருமடங்கு எண்ணிக்கையிலான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகமாகக் காணப்படுகின்ற நிலையில், தொற்றாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேணிய சுமார் 5700 குடும்பங்களைச் சேர்ந்தளவர்களில் பெருமளவானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படக்கூடும் என்று சுகாதாரத் தரப்பு எதிர்வு கூறியுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் இன்றையதினம் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 443 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 25 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள் என்றும் ஏனைய 420 பேரும் பேலியகொடை கொத்தணியில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 8691 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 5858 பேர் குணமடைந்துள்ளதோடு 6305 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்று மாலை பதிவான கொரோனா தொற்று மரணத்தை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 24 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து மேல் மாகாணத்தில் 11 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் நாட்டு மக்கள் அனைவரதும் பொருளாதார நலனைக் கருத்திற் கொண்டு நாளை முதல் பொருளாதார மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்ப உள்ளன.

தற்போது புதிதாக உருவாகியுள்ள கொத்தணிகளை முழுமையாகக் கட்டுப்படுத்த மேலும் ஒரு மாதமேனும் செல்லும் என்று தெரிவித்துள்ள சுகாதார தரப்பு முழு உலகிலும் கொரோனாவை ஒழிப்பதற்கு இரு வருடங்கள் எடுக்கும் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் 11 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலில்
மேல் மாகாணத்தில் 5700 குடும்பங்கள் முதலாவது தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று 6200 குடும்பங்கள் இரண்டாம் தொடர்பாளர்களாக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 89 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கு அமையவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் எவரேனும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு 14 உதவி பொலிஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

மேலதிகமாக 1000 படுக்கைகள் தயார் நிலையில்
நாடளாவிய ரீதியில் கொரோனா சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்ற வைத்தியசாலைகளில் 7530 சிகிச்சை படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 6373 சிகிச்சை படுக்கைகள் பயன்பாட்டிலுள்ளன. அதற்கமைய சுமார் 1000 படுக்கைகள் மேலதிகமாக தயார் நிலையிலேயே உள்ளதாக பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

களுத்துறை
களுத்துறை மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப்பிரிவுகளில் 2420 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினரை உள்ளடக்கி கொவிட் கட்டுப்பாட்டுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதான களுத்துறை மாவட்ட செயலாளர் பிரசன்ன ஜனக குமார கினிகே தெரிவித்தார்.

1310 மில்லியன் ரூபா நிதி நிவாரண கொடுப்பனவிற்காக களுத்துறை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக யாரும் சமூர்த்தி அலுவலகங்களில் அல்லது பிரதேச செயலகத்திற்கு வருகை தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். கொடுப்பனவுகள் அதிகாரிகளால் அவரவர் வீடுகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குருணாகல்
குருணாகல் மாவட்டத்தில் 4252 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இக் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் பெருமதியான நிவாரணப் பொதிகளை வழங்குவதற்காக 16 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 5000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு குருணாகல் நகர சபைக்குட்பட்ட 3500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

பதுளை
பதுளை மாவட்டத்தில் இன்று மாலை வரை 24 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 2193 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு 1215 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

நுரவரெலியா
நுவரெலியா மாவட்டத்தில் இன்று மாலை வரை 34 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடைய தொற்றாளர்களாவர். இவர்களுடன் தொடர்புகளைப் பேணிய முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட தொற்றாளர்களான இனங்காணப்பட்டுள்ள 1407 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று நுரவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்தார்.

No comments:

Post a Comment