எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா முற்பணம் வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த வருடம் நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் இருந்த பொழுது தேயிலை சபையுடன் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி 10,000 ரூபா பெற்றுக் கொடுத்தோம். இந்த முறையும் அந்த தொகையை வழங்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
அதற்கு அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருக்கின்றவர்களும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று நாட்டில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகின்றது. அதன் காரணமாக பல மாவட்டங்கள் முடக்கப்பட்டிருக்கின்றது. ஒரு சில நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மலையகத்திலும் இந்த நிலைமையே இருக்கின்றது.
அரசாங்கம் ஏனைய மாவட்டங்களுக்கு வழங்குகின்ற 10,000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களை மலையகத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக பல பாதிப்புகளை மக்கள் சந்தித்திருக்கின்றனர். குறிப்பாக பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர். அதிலும் எங்களுடைய மக்கள் ஏற்கனவே பொருளாதார சிக்கலில் இருக்கின்ற நிலையில் இந்த நிலைமை இன்னும் அவர்களை பாரிய பிரச்சினைக்குள் தள்ளிவிட்டுள்ளது.
எனவே அரசாங்கம் மலையக பகுதியில் இருக்கின்ற கொரோனா தொற்றுக்கு முகம் கொடுத்துள்ள மக்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் எதிர்வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆகக் குறைந்தது 10,000 ரூபாவை முற்பணமாக கொடுப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுவரெலியா நிருபர்
No comments:
Post a Comment