ஏறாவூர் பொதுச் சந்தைக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான களப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஏறாவூர் பொதுச் சந்தையானது மூவின மக்களும் பயன்படுத்துகின்ற ஒரு சந்தையாகும். இங்கு வியாபாரிகள் தமது உள்ளுர் உற்பத்திப் பொருட்களையும், விற்பனைப் பொருட்களையும் குறைந்த விலையில் சந்தைப்படுத்துகின்றனர். அதுமாத்திரமல்ல ஏறாவூர் நகரத்திற்கு வெளியே உள்ள மக்களும் தங்களது நுகர்வுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இச்சந்தையையே நாடிவருகின்றனர்.
இச்சந்தையானது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தற்காலிகக் கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. குறிப்பாக, மழை காலங்களில் இச்சந்தைப் பகுதியில் நீர் தேங்கி நிற்பதுடன், அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. அதனால் தொற்று நோய்களும் பரவி உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் நிலைமைகளும் காணப்படுகிறது.
இச்சந்தையை அபிவிருத்தி செய்யும்பொருட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அமைச்சினால் சுமார் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அபிவிருத்திப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அச்சந்தைக் கட்டிடத் தொகுதியானது இன்று பூரணப்படுத்தப்படாமல் அறையும் குறையுமாக காணப்படுகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ ஏறாவூர் பிரதேசத்திற்கு வருகை தந்த போது, ஏறாவூர் பொதுச் சந்தையை முழுமையாக அபிவிருத்தி செய்து தருமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தோம். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருகின்ற போது நிச்சயமாக அதனை பூரணப்படுத்தி தருவோம் என அவர் உறுதியளித்தார்.
குறித்த சந்தையினை முழுமையாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு, ஏறாவூர் பொதுச் சந்தையின் தற்போதைய நிலையினையும், வர்த்தகர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். அச்சந்தைக் கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிப்பதற்க நிதி உதவி வழங்குமாறும் கோரிக்கை விடுத்தேன். அவற்றை கருத்திற்கொண்ட ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி அமைச்சிக்கு உத்தரவிட்டார்.
அதற்கமைவாக ஏறாவூர் பொதுச் சந்தை அபிவிருத்தி விடயமானது, 2021ஆம் ஆண்டு வரவு செலவு மதிப்பீட்டுக்குள் உள்ளடக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு, தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது,
இந்த விடயமாக களப்பரிசோதனைகளை மேற்கொள்ளும் பொருட்டு, அமைச்சின் அதிகாரிகள் குழுவொன்று இம்மாதம் ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் சுபைர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment