அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்காக கொரோனாவை பயன்படுத்துகின்றதா ? - ரோஹண பண்டார - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்காக கொரோனாவை பயன்படுத்துகின்றதா ? - ரோஹண பண்டார

(செ.தேன்மொழி) 

அரசாங்கம் தனது இயலாமையை மறைப்பதற்காக கொரோனா வைரஸ் பரவலை பயன்படுத்தி வருக்கின்றதா? என்று சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் இருந்த அரசாங்கங்கள் தங்களது இயலாமையை மறைப்பதற்காக யுத்தத்தையே பயன்படுத்தி வந்தன. தற்போதைய அரசாங்கமும் அதன் இயலாமையை மறைப்பதற்காக கொரோனா வைரஸ் பரவலை பயன்படுத்தி வருகின்றதா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

ஏன் என்றால் பொருளாதார வீழ்ச்சி தொடக்கம் அனைத்து சிக்கல்களுக்கும் அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலையே காரணம் காட்டி வருகின்றது. எமது அயல் நாடான இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் எப்படியாவது எமது நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

எமது நாட்டில் கடல்மார்க்கமான கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இதன்போது கொண்டுவரப்படும் போதைப் பொருள் மற்றும் மஞ்சள் தூள் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் இந்தியாவிலிருந்தே இந்நாட்டுக்கு எடுத்துவரப்படுகின்றன. இதன்போதே, வைரஸ் தொற்றுக்கான வாய்ப்பு ஏற்படுவதற்கு அதிகளவான வாய்ப்பு உள்ளது என்பதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் இராணுவத்தினர் மாத்திரம் தனித்து செயற்படாது, சுகாதார பிரிவினரது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வளவு காலமும் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தொடர்பில் கவனம் செலுத்தும்போது, எங்கோ தவறு இடம்பெற்றுள்ளமை உணரக்கூடியதாக இருக்கின்றது. அதனை கண்டறிந்து வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும். 

இதேவேளை, அரசாங்கம் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்று கூறிக்கொண்டு 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதிலே குறியாக இருக்கின்றது. தற்போதுள்ள நிலைமையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாட்டுக்கு தேவையா? அது சர்வாதிகார போக்கையே கொண்டு அமையப் பெற்றுள்ளது. 

அதனால் மக்கள் மத்தியிலும் தற்போது 20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக எதிர்ப்பொலிகள் எழுந்துள்ளன. இந்நிலையில் அரசாங்கம் அதனை மக்களிடமிருந்து மறைப்பதற்காகவா? கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான பேச்சுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது என்ற சந்தேகமும் எமக்கு எழுந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment