யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 20 ஆம் திகதியில் இருந்து பலர் இங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 3 பேர் வரை வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்னர். கடந்த முறை இதேபோன்று தனிமைப்படுத்தல் முகாமை அமைப்பதற்கு கிராம மக்களாகிய நாம் எமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தோம்.
ஆனால் இம்முறை நாடு முழுவதும் வைரஸ் தொற்று இனங்காணப்பட்டு வரும் காரணத்தால் மனிதாபிமான அடிப்படையில் எமது எதிர்ப்பைக் காட்டாமல் அமைதியாக இருந்தோம்.
இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள அயல் கிராமங்களுக்கு இதனால் எந்தப்பாதிப்பும் வராது என நாம் நம்பியிருந்தோம். ஆனால் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களால் நம்பிக்கை இழந்துள்ளோம்.
தனிமைப்படுத்தப்பட்டவர் தப்பிச்செல்ல முயன்றார். அயலில் உள்ளவர்களுடன் சட்டவிரோத மதுபான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றனர் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்துள்ளோம். இது எமக்கு பெரும் அச்சுறுத் தலாக உள்ளது.
தற்போது எமது பிரதேசத்துக்கு வருவதற்கு ஏனையவர்கள் அச்சப்படுகிறார்கள். நாளடைவில் ஒதுக்கப்பட்டவர்களாக ஆக்கப்படுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நிம்மதியாக வீதிகளில் நடமாட முடியவில்லை. பெரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளோம்.
மனிதாபிமான ரீதியில் நாம் ஒத்துழைப்பு வழங்கியதற்கு எமக்கு தொற்று நோயையா பரிசாக வழங்கப் போகிறீர்கள். அமைதியாக வாழ்ந்த வாழ்வைச் சீரழித்து விட்டதாகவே எண்ணுகிறோம். எனவே உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அந்த வகையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் உள்ளவர்களுடன் தொடர்பைப் பேணாதவாறு சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தல் மற்றும் தொடர்பைப் பேணுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தல். தனிமைப்படுத்தப்பட்டவர்களுடன் தொடர்பை பேணுபவர்கள் உரிய பாதுகாப்புகள் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வெளியில் நடமாடுவதைத் தடுத்தல். சுகாதாரத்துறையினர் தொற்று நீக்கல் செயற்பாடுகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுற்றுவட்டாரத்தில் முன்னெடுக்க வேண்டும்.
மேற்குறித்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பின் இப்பகுதியில் இருந்து உடனடியாக தனிமைப்படுத்தல் நிலையத்தை அகற்ற வேண்டும் என்றுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். மாவட்டச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment