அமரபுர, ராமான்ய பீடங்கள், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் எதிர்ப்பு பிரதமரின் பிரதிபளிப்பா ? ரிஷாத் பதியூதீன் மீது நியாயமற்ற குற்றத்தை சுமத்தி அவரை கைது செய்ய முயற்சி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

அமரபுர, ராமான்ய பீடங்கள், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் எதிர்ப்பு பிரதமரின் பிரதிபளிப்பா ? ரிஷாத் பதியூதீன் மீது நியாயமற்ற குற்றத்தை சுமத்தி அவரை கைது செய்ய முயற்சி

(செ.தேன்மொழி) 

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் அமரபுர, ராமான்ய பீடங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து, கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவற்றுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நெருங்கி தொடர்பைக் கொண்டுள்ளார். இந்நிலையில் 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பிரதமரின் பிரதிப்பளிப்பையா இந்த அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளது ? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார கேள்வி எழுப்பினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வி எழுப்பிய அவர் மேலும் கூறியதாவது, அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்று பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கமைய எதிர்த்தரப்பு உறுப்பினர்களைப் போன்று ஆளும் தரப்பு உறுப்பினர்களும் திருத்தம் தொடர்பான தங்களது எதிர்ப்பை பகிரங்கமாக தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் அமரபுர, ராமான்ய பீடங்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும் 20 ஆவது திருத்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. எனினும் ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தாது, 20 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றார். 

20 ஆது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அதிகாரங்களுக்கே பாதிப்பு ஏற்படும். இந்நிலையில் திருத்த சட்டமூலத்தை சமர்ப்பித்த பின்னர் அது தொடர்பான தனது செயற்பாடுகளை அவதானிக்க கூடியதாக இருக்கும் என்று பிரதமர் மஹிந்தவும் தெரிவித்திருந்தார். 

அதற்கமைய பிரதமருடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ள அமரபுர, ராமான்ய பீடங்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவை என்பன 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் தெரிவித்திருக்கும் எதிர்ப்பானது, மஹிந்தவின் எண்ணத்தின் வாயிலாக எழுந்ததா ? என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. 

இதேவேளை, 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான மக்களது கவனத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மீண்டும் அரசியல் பழிவாங்கலை ஆரம்பித்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் அவருடைய சகோதரர் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஆளும் தரப்பினர் கடந்த காலங்களில் முன்வைத்திருந்தனர். அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவங்களுடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் ரிஷாத் பதியூதினின் சகோதரரை கைது செய்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர். எனினும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதினால் அவரை விடுதலை செய்திருந்தனர். தற்போது ரிஷாத் பதியூதீன் மீது நியாயமற்ற குற்றத்தை சுமத்தி அவரை கைது செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளனர். 

இனவாத அடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கம். 20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பேச்சுகளை மறைப்பதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஊடாக மீண்டும் இனவாதத்தை தூண்டியுள்ளது. 

எத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், 20 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றும் எண்ணத்திலே ஜனாதிபதி இருக்கின்றார் என்பது இது போன்ற செயற்பாடுகள் ஊடாக விளங்கிக் கொள்ள கூடியதாக இருக்கின்றது.

No comments:

Post a Comment