வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் - பவித்திரா கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

வன்னியின் சுகாதார நிலைவரம் தொடர்பாக அமைச்சர்களான டக்ளஸ் - பவித்திரா கலந்துரையாடல்

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நிலவுகின்ற வைத்தியர் பற்றாக்குறையை நீக்கி வைத்தியசாலையின் முழுமையான செயற்பாட்டிற்கு வழியேற்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு தேவையான அவசர தேவைகளை பூரத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார தரப்பினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை (16.10.2020) சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி எஸ். ஸ்ரீதரன் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே கடற்றொழில் அமைச்சர் மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 60 வைத்தியர்களுக்கான தேவை காணப்படுகின்ற நிலையில் 24 வைத்தியர்கள் மாத்திரமே தற்போது கடமையாற்றி வருகின்றமையினால் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினரால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கடற்றொழில் அமைச்சர், குறித்த விடயம் தொடர்பாக விரைவான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலையில் காணப்படுகின்ற விபத்து மற்றும் அவசர சேவை அலகு ஒன்றிற்கான அவசியத்தை சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த அலகை முழுமைப்படுத்துவதற்கு சுமார் 1,185 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை பெற்றுக் கொள்ளக்கூடிய வழிவகைகள் தொடர்பாககும் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment