தேசப்பற்று, பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கொள்கைக்கு முரணாக பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது - உலபனே சுமங்கல தேரர் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

தேசப்பற்று, பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கொள்கைக்கு முரணாக பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது - உலபனே சுமங்கல தேரர்

(இராஜதுரை ஹஷான்) 

தேசப்பற்று, பௌத்த மதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் கொள்கைக்கு முரணாக பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது. ஆட்சி மாற்றத்தில் பெரும்பான்மையின பௌத்த சிங்கள மக்களே பெரிதும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். இனியாவது சிங்கள பௌத்த மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என மஹஜன கட்சியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்குக்கு சாபக்கேடு, நாடு இருண்ட யுகத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. சிறைக் கைதிகளுக்கு அரச அதிகாரங்களை வழங்கும் அளவிற்கு அரசாங்கம் இழிநிலை அடைந்துள்ளது. நடப்பு நிலவரம் குறித்து மாநாயக்க தேரர்கள் மௌனம் காப்பது கவலைக்குரியது எனவும் குறிப்பிட்டார். 

நாரஹேன்பிடிய தர்ம நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், பௌத்த மத கோட்பாடு, தேசப்பற்று ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு சில குறைபாடுகள் காணப்பட்டன. இருப்பினும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. 

அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது முஸ்லிம் மற்றும் பிற இன மக்கள் மீது இனவாத குற்றச்சாட்டுக்களை முன்வைத்தது. பௌத்த மதத்திற்கு பாரிய விளைவுகள் ஏற்பட போகின்றன. அமெரிக்கா இலங்கையை ஆக்கிரமிக்க போகிறது என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆட்சிக்கு வந்த பிறகு இவ்விடயங்களுக்கு தீர்வை வழங்குவதாகவும் குறிப்பிட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றும் நிறைவேற்றப்படவில்லை. பெரும்பான்மையினை மக்களே பெருமளவில் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 

அரசியமைப்பின் 20 ஆவது திருத்தம் ஜனநாயகத்துக்கு சாபக்கேடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு இத்திருத்தத்தை எதிர்க்கும் தற்துணிவு கிடையாது. ராஜபக்ஷர்களுக்கு அடிபணிந்து மக்களை பாரிய நெருக்கடிக்குள் தள்ள முயற்சிக்கிறார்கள். 

பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக் கொள்ள அரசாங்கம் எந்நிலைக்கும் செல்லும். சிறைக் கைதிகளுக்கு அரச அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் இழிநிலையை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை அரசியல் வரலாற்றில் எந்த அரசாங்கமும் இவ்வாறான நிலைக்கு செல்வில்லை. நாடு இருண்ட யுகத்தை நோக்கி செல்கிறது. 

மக்கள் பிரதிநிதிகளை நம்பி பிரயோசனம் கிடையாது. அனைத்து விடயங்களையும் தெரிந்துகொண்டு மாநாயக்க தேரர்கள் மௌனம் காப்பது கவலைக்குரியது. ஒரு சில மதகுருமார்கள் அரச சுகபோகங்களுக்கு அடிபணிந்து விட்டார்கள். ஆகவே நாட்டு மக்களே அரசாங்கத்தின் செயற்பாடுகளை பகிரங்கமாக எதிர்க்க வேண்டும். என்றார்.

No comments:

Post a Comment