பிள்ளையான் கலந்து கொள்வதற்கு அரச வழக்குரைஞர் ஆட்சேபனை - சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பால் உத்தரவு பிற்போடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 28, 2020

பிள்ளையான் கலந்து கொள்வதற்கு அரச வழக்குரைஞர் ஆட்சேபனை - சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிவிப்பால் உத்தரவு பிற்போடப்பட்டது

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மாவட்ட அபிவிருத்தி ஒருங்ணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அரச வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிள்ளையான் இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா இல்லையா என்பது பற்றி எதிர்வரும் நவம்பர் 02ஆம் திகதி அறிவிக்கப்படும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

விளக்கமறியல் கைதியான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையானை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அபூபக்கர் உவைஸ் கடந்த வெள்ளியன்று 23.10.2020 மட்டக்களப்பு மேல் நீதிமன்ற திறந்த நீதிமன்றில் நகர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எனினும் இந்த விடயத்தில் ஆட்சேபனை தெரிவித்த அரச வழக்குரைஞர் மாதினி விக்னேஸ்வரன் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் என்ற வகையிலேயே சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இணைத் தலைவர் என்ற வகையில் நிர்வாக செயற்பாடுகளுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளது அதனை நான் ஆட்சேபிக்கிறேன். அதற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் தொடர்பில்லை. இந்த ஆட்சேபனையினூடாக சிவநேசத்த்துரை சந்திரகாந்தனின் நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியல் கைதியாக உள்ள ஒருவருக்கு முதற்தடவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், தொடர்ந்தும் அனுமதி வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான அனுமதி வழங்கப்பட்டால் எதிர்காலத்தில் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் விளக்கமறியல் கைதியான, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் சுதந்திரமாக நடமாடுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தார்.

இந்த விடயங்களை ஆராய்ந்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரீ. சூசைதாசன் திங்கட்கிழமை 26.10.2020 வரை அறிவிப்பை பிற்போட்டிருந்தார்.

இதற்கமைய அறிவித்தல் திங்கட்கிழமை வழங்கப்படவிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீதிமன்றங்களில் தாங்கள் முன்னிலையாவதில்லை என்று மேற்கொண்ட தீர்மானத்துக்கமைய பிள்ளையானுக்கெதிரான ஆட்சேபனைக்கான உத்தரவு பற்றிய அறிவித்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 02ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அரச சட்ட வழக்குரைஞர் மாதினி விக்னேஸ்வரனுக்கும் சந்திரகாந்தனின் சட்டத்தரணி உவைசுக்கும் மேல் நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.

இதனிடையே கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை முன்னாயத்த நடவடிக்கையாக அவசர அவசிய கூட்டங்களைத் தவிர ஏனைய அனைத்து ஒன்று கூடல்களும் தவிர்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன்படி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இடம்பெறவில்லை.

No comments:

Post a Comment