நூருல் ஹுதா உமர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட் பதியூதீனை அரசியல் தேவைக்காக, பெளத்த இனவாதிகளை திருப்திபடுத்துவதற்காகவே கைது செய்துள்ளனர். குறுகிய நோக்கங்களுக்காக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவரை பழிவாங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். அவரின் விடுதலைக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், வட மாகாண முஸ்லிம்களை கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பதற்கு அழைத்துச் செல்வதற்காக அரச நிதியை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்துள்ளனர். தங்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு துணையாக செயற்படவில்லை என்பதற்காகவே தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்துள்ளனர்.
அத்தோடு அரசாங்கத்திற்கு சிங்கள பௌத்த மக்களிடையே செல்வாக்கு குறைந்து கொண்டு வருவதையும் சரி செய்து கொள்வதற்காகவும் தலைவர் றிசாட் பதியூதீனை கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் அரச நிதியில் சட்ட ரீதியாக புத்தளத்தில் வாழும் வட மாகாண முஸ்லிம்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் போதெல்லாம் செலவு செய்யப்பட்ட அரச நிதி சட்டத்திற்கு மாறானது என்று சொல்லவுமில்லை. அத்தகையதொரு நடவடிக்கைதான் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மேற்கொள்ளப்பட்டது.
ஆதலால் தலைவர் றிசாட் பதியூதீனை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரே நாடு ஒரே சட்டம் என்று தெரிவித்துக் கொண்டு பாரபட்சமாக நடந்து கொள்வதென்பது தவிர்க்கபட வேண்டும். என்றார்.
No comments:
Post a Comment