தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் நேற்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட தபால் அதிபர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தபால் அதிபர்களால் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆளணி வெற்றிடங்கள் இதுவரை நிரப்பப்படாமை, தபால் நிலைய கட்டிடங்கள் இல்லாமை, வெளி மாவட்டங்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இதன்போது தபால் சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஏ.சேனநாயக்க, வடமாகாண பிரதி தபால் மாஅதிபதி திருமதி மதுமதி வசந்தகுமார், வடமாகாண தபால் சேவை சிரேஷ்ட நிர்வாக செயலாளர் எஸ்.ஜெபரெட்ணம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறை விசேட நிருபர்
No comments:
Post a Comment