காணாமல் போனதாகச் சொல்லப்படும் சிலர் வீசா பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நேற்றைய தினம் (02) யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஊடகத்துறை அமைச்சர் யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் காணாமல் ஆக்கட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் கேள்வி எழுப்பும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள் விடயத்தில் வெறுமனே ஊடகவியலாளர்கள் மட்டுமல்லாது பொதுவாகவே நாம் பார்க்க வேண்டும். இந்த நாட்டிலே 30 வருடங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுள்ளது. யுத்தம் ஒன்று ஏற்படுமானால் பல அசம்பாவிதங்களும் ஏற்படும்.
காணாமல் போனோர் பற்றி எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளன. காணாமல் போனதாக சொல்லப்படும் சிலர் வீசா பெற்று வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், சிலர் தமது அடையாளங்களை, முகவரியை மாற்றிவிட்டு இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் பல முரண்பாடுகள் இருக்கின்றன.
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களெனின் அவர்களின் கடந்த காலச் செயற்பாடுகளையும் ஆராய வேண்டும். 2010 க்கு முன்னரே ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள். 2010 க்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எவருமே காணாமலாக்கப்படவில்லை என்றார்.
சமூக ஊடகங்கள் மற்றும் இணையவழியிலான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இடம்பெறுகிறது. இதற்கு முறையான சட்ட அணுகுமுறை தொடர்பில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
இணையவழியிலான குற்றங்களை தடுப்பதற்காக புதிய சட்டங்களை இயற்றுவது தொடர்பாக மூன்று நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம். இவ்வாறு இடம்பெறும் குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கண்டறிவதில் பல சிக்கல்கள் உள்ளன. இது தொடர்பில் விரைவில் புதிய சட்டங்களை உருவாக்குவோம் என்றார்.
மேலும் ஊடகவியலளார்களுக்கான இழப்பீடுகள் தொடர்பான கட்நத கால அரசு சேகரித்த விபரங்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் கிடைத்தவுடன் அது தொடர்பில் உடனடி நகர்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொக்குவில் நிருபர்
No comments:
Post a Comment