ஒப்பந்தக்காரர்களால் பூர்த்தி செய்யப்படாத வீதி அபிவிருத்தி பணிகளை பொறுப்பேற்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜொன்ஸ்ட்ன் பெர்னாண்டோவின் ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஒப்பந்த காலம் நிறைவடைந்தும், பணிகள் நிறைவடையாதிருக்கும் வீதிகளை கண்டறிந்து அவற்றை தாம் பொறுப்பேற்று வீதி பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான வீதிகள் காணப்படுவதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
A மற்றும் B பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளும் கிராம மற்றும் தோட்டப்புறங்களிலுள்ள வீதிகளிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
உரிய வகையில் ஒப்பந்தத்தை பூர்த்தி செய்யாத ஒப்பந்தக்காரர்கள் தொடர்பிலான அறிக்கையொன்றை அமைச்சரிடம் வழங்கவும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
“ஒப்பந்தக்காரர்கள் பணிகளைத் தாமதப்படுத்துவதுடன் பணிகளைத் தொடங்க அதிக காலம் எடுக்கின்றனர். அவர்கட்கு மன்னிப்பு வழங்கப்படாது என்பதுடன் அந்தத் திட்டங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபை எடுத்துக்கொள்ளும்” என அமைச்சர் ஜொன்ஸ்ட்ன் பெர்னாண்டோ அண்மையில் அவரது அமைச்சில் நடந்த கூட்டமொன்றில் தெரிவித்தார். அவர்களுக்கு எதிர்காலத்தில் ஒப்பந்தங்கள் வழங்கப்படமாட்டாது எனவும் மேலும் தெரிவித்தார்.
“வீதி அபிவிருத்தி திட்டங்களை விரைவுபடுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். ஆகவே ஒப்பந்தக்காரர்கள் அதற்கு இப்போது முன்வர வேண்டும். தாமதப் பணி நல்லதல்ல. நாட்டையும் மக்களையும் பொறுத்தவரை வேலையை தாமதமாக்குவது நல்லதல்ல. நீங்கள் கேள்விப்பத்திரங்களை (டெண்டர்) சமர்ப்பிக்க முன் அந்தத் திட்டத்தைக் கையாளும் திறன் உள்ளதா எனப்பார்க்க வேண்டும். பணி தாமதமாகும் போது பொது நிதி விரயமாகிறது” என ஒப்பந்தக்காரர்களிடம் அவர் தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் அநேக வீதி நிர்மாணப் பணிகள் வரவுள்ளன. ஆகவே உங்கள் வேலையை திறமையாகச் செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்குப் பங்காற்றுங்கள்” என அமைச்சர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment