"சட்டத்தை மலினப்படுத்த இடமளிக்காதீர்" ரிஷாட் கைதாகாமை குறித்து சட்டமா அதிபர் பொலிஸார் மீது சீற்றம் - உத்தரவுகள் பலவும் மீளவும் பிறப்பிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

"சட்டத்தை மலினப்படுத்த இடமளிக்காதீர்" ரிஷாட் கைதாகாமை குறித்து சட்டமா அதிபர் பொலிஸார் மீது சீற்றம் - உத்தரவுகள் பலவும் மீளவும் பிறப்பிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸாருக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். 

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் ரிஷாட்டை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், ரிஷாத் பதியுதீனை இதுவரையில் பொலிஸார் கைது செய்யவில்லை. சட்டத்தை மலினப்படுத்தும் வகையில் பொலிஸார் செயற்படக்கூடாதென சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளையும், சட்டமா அதிபர் வழங்கும் அறிவுறுத்தல்களையும் பொலிஸார் மெத்தனமாக கருதி விடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரிஷாத் கைது செய்யப்படாமை தொடர்பில் சட்டமா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவிற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பொலிஸார் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை மீறிச் செயற்படும் முன்னாள் அமைச்சருக்கும், அவருக்கு உதவுவோருக்கும் எதிராக சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சட்டமா அதிபர், பொலிஸாருக்கு கடுமையான தொனியில் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, கைது செய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் தலைமறைவான நிலையில் உள்ளதாக பொலிஸ் தலைமையகமும் இன்று தெரிவித்தது.

நேற்று மாலை 6.00 மணியாகும்போது 48 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் அவரைக் கைது செய்ய முடியவில்லையென பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரிஷாத் பதியுதீனை தேடி கொழும்பின் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடத்திலும், வெள்ளவத்தை மற்றும் மன்னார் பகுதிகளிலும் விசேட தேடுதல்கள் நடத்தப்பட்டபோதும் அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும், அவருடன் நீண்ட காலமாக இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துவதற்கான திட்டத்தின் பணிப்பாளர் சம்சுதீன் மொஹம்மட் யாசீனையும் கைது செய்ய முடியவில்லையெனவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இவர்கள் இருவரையும் கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் கீழ் 6 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேலதிகமாக உளவுத் துறையின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்டுள்ள குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் வணிக குற்ற விசாரணைப் பிரிவையும் இந்த விசாரணைகளையும் மேற்பார்வை செய்யும் உயர் அதிகாரி ஒருவரை சி.ஐ.டி.யிலிருந்து இடமாற்றுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக சி.ஐ.டி.யின் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

ரிஷாத்தை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கி 48 மணி நேரமும் கடந்துள்ளதன் பின்னணியிலேயே அவரை இடமாற்றுவதற்கான பரிந்துரை அடங்கிய பத்திரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்நிலையிலேயே, ரிஷாத் பதியுதீனை கைது செய்ய ஆலோசனை பிறப்பிக்கப்பட்டு இரு நாட்களாகும் நிலையில், அவர் கைது செய்யப்படாமை தொடர்பில் சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, நேற்று மாலை சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவை தனது அலுவலகத்துக்கு அழைத்து விளக்கம் கோரியுள்ளார்.

சட்டத்தின் மீதான ஆட்சியைப் பாதுகாக்குமாறு இதன்போது சட்டமா அதிபர், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனைகளையும் நீதிமன்ற உத்தரவுகளை கால தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எச்சரித்து தெரிவித்ததாக சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

இதன்போது தாமதாகும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பதையும் சி.ஐ.டி. பிரதானிக்கு சட்டமா அதிபர் எடுத்துரைத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad