நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது : ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Thursday, October 29, 2020

நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை ஏமாற்ற முடியாது : ஹர்ஷ டி சில்வா

(செ.தேன்மொழி)

நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் உண்மையான தகவல்களை அரசாங்கம் நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தினால் மாத்திரமே எதிர்காலத்தில் முகங்கொடுக்க நேரிடக்கூடிய பாதிப்புக்களிலிருந்து நாட்டை பாதுகாக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. எனினும் அதனை ஏற்க மறுக்கிறது. ஆனால் இலங்கையின் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இல்லை என்று சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. எதிர்வரும் காலங்களில் சர்வதேச கடனை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

எதிரணியுடன் கொண்டுள்ள நட்புறவினால் அல்லது ராஜபக்ஷாக்கள் மீதுள்ள வெறுப்பினால் அந்நிறுவனங்கள் அவ்வாறு கூறவில்லை. அரசாங்கம் நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிப்பதைப் போல சர்வதேச முதலீட்டாளர்களை இலகுவில் ஏமாற்ற முடியாது.

எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இலங்கை 6-7 பில்லியன் டொலர்களை சர்வதேசத்திற்கு செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறு 5 வருடங்களுக்கு 25 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டி ஏற்படும். இவ்வாறானதொரு நிலையில் நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளது. சர்வதேச கடன்களை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா எமக்கு உதவி செய்யும் என்று எதிர்பார்த்தாலும், ஒரு தவணையாவது நாம் சர்வதேச கடனை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் அதனால் நாட்டுக்கு ஏற்படும் கறுப்பு புள்ளியை நீக்க முடியாமல் போய்விடும் என்றார்.

No comments:

Post a Comment