துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரும் மனுவில் தாங்கள் கைச்சாத்திடவில்லை என அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கெஹெலிய ரம்புக்வெல, சுரேன் ராகவன், மகிந்த அமரவீர, விதுர விக்கிரமநாயக்க, விமல் வீரவன்ச ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறான மனு எதுவும் தங்களிற்கு வழங்கப்படவில்லை தாங்கள் அது குறித்து அறிந்திருக்கவும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
20 ஆவது திருத்தத்திற்கான வாக்களிப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த வேண்டுகோள் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனுவொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டதாகவும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைச்சாத்திடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கொழும்பை தளமாக கொண்டியங்கும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியில், தங்கள் கையொப்பத்திற்காக இதுபோன்ற ஒரு மனு தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், அத்தகைய நடவடிக்கை குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக் கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு 2016 செப்டம்பர் 8 ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment