நேபாள நாட்டு பிரதமரின் முதன்மை செயலாளர் உட்பட செயலகத்தில் பணியாற்றி வரும் அதிகாரிகள் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேபாள நாட்டின் பிரதமராக இருந்து வருபவர் சர்மா ஒலி (வயது 68). சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவரை சுற்றி இவரது உதவியாளர்கள் எப்பொழுதும் இருந்து வருவார்கள். மூத்த தலைவர்களுடனும் மற்றும் அமைச்சரவை சகாக்களுடனும் பலசுற்றுகளாக கூட்டங்கள் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் பிரதமரின் செயலகத்தில் பணிபுரிந்து வரும் 3 ஆலோசகர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் அரசியல் ஆலோசகர் பிஷ்னு ரீமல், ஊடக ஆலோசகர் சூர்யா தபா, வெளிவிவகார ஆலோசகர் டாக்டர் ராஜன் பட்டாராய் ஆகிய 3 ஆலோசகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பிஷ்னு டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், தன்னை தொடர்பு கொண்டவர்கள் உடல்நலனை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோன்று பிரதமரின் ஊடக ஆலோசகர் தபாவும் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சமூக ஊடகம் வழியே தெரிவித்து உள்ளார்.
இதுதவிர்த்து பிரதமரின் முதன்மை செயலாளர் இந்திரா பண்டாரி, செயலகத்தின் புகைப்படக்காரர் ராஜன் காப்ளே ஆகிய 2 அதிகாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும் நேபாள பிரதமரின் நிலை என்ன என்பது பற்றி தெளிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.
No comments:
Post a Comment