ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் மட்டு, மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கனிப்பு : முன்னாள் அமைச்சர் சுபைர் ஜனாதிபதியிடம் முறையீடு - News View

About Us

About Us

Breaking

Sunday, October 25, 2020

ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் மட்டு, மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கனிப்பு : முன்னாள் அமைச்சர் சுபைர் ஜனாதிபதியிடம் முறையீடு

நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு, மாவட்டத் தலைவருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘’செளபாக்கியத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கமைவாக, வறுமை இல்லாத இலங்கையை உருவாக்குதல், எனும் பிரதான குறிக்கோளின் அடிப்படையில் ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களைப் வழங்கும் விசேட வேலைத் திட்டத்தின் ஊடாக, முதற்கட்டமாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த திட்டத்தினூடாக தொழில்வாய்ப்புக்களைப் பெறுவதற்கு, உரிய தகைமையுடையவர்களிடமிருந்து பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் விண்ணப்பம் கோரப்பட்டு, நாட்டிலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் நேர்முகப்பரீட்சைகள் நடாத்தப்பட்டது. அதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகையினரின் பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 249 பேர் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ள போதும், 10 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த 10 பிரதேச செயலக பிரிவுகளும் தமிழ் பிரதேச செயலக பிரிவுகளாகும். மாவட்டத்தின் ஏனைய 04 முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளும் இத்திட்டத்திலிருந்து புறக்கனிக்கப்பட்டுள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்தில், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நியமனமானத்தின் போது ஒரு சமூகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புறக்கனிக்கப்பட்டுள்ள, 4 முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவுகளையும் இத்திட்டத்தில் இணைத்து, அப்பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கும் குறித்த நியமனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மிகக் குறைந்த கல்வித் தகைமை உடைய குடும்ப உறுப்பினர்களுக்கு, அரச தொழிலினைப் பெற்றுக்கொடுத்து, அக்குடும்பத்தினை வறுமையிலிருந்து விடுவிப்பதற்கு, ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டமானது நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கனிக்கப்பட்டிருப்பது கவலையான விடயமாகும். இது ஜனாதிபதியின் தேசிய கொள்கைக்கு முறனாகவுள்ளதுடன், பெரும் விமர்சனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் முன்னாள் அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment