வீடில்லா பிரச்சனைகளை தீர்க்க அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் போன்று தொடர் மாடி வீடுகளை அமைக்கும் யோசனையை முன்வைக்கவுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களை வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03) சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து, உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடக அமைச்சினைப் பொறுப் பேற்றுக் கொண்ட பின் வட பகுதிக்கு வருகை தந்து ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளோம்.
வினைத்திறன் மிக்க ஒரு சேவையை வழங்க நாம் திட்டமிட்டுள்ளோம். நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து முன் கொண்டு செல்ல உங்களுடைய பங்களிப்பு அவசியம். கடந்த காலங்களில் பார்க்கின்ற போது ஊடகத்துறையில் ஒரே பாங்கான பிரச்சனைகளே உள்ளன.
ஜனாதிபதி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை வழங்கும் போது இராஜாங்க அமைச்சுக்களுக்கும் ஒதுக்கீடுகளை வழங்கி அதனூடாகவும் விரைவாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்.
தெற்கு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வரப்பிரசாதங்களும் எங்களுக்கும் கிட்ட வேண்டும் என வடக்கு ஊடகவியலாளர்கள் கோருகின்றனர்.
வடக்காக இருக்கட்டும், தெற்காக இருக்கட்டும், மேற்காக இருக்கட்டும், கிழக்காக இருக்கட்டும் ஊடகவியலாளர்கள் பொதுவாகவே நோக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளும் பொதுவாகவே காணப்படுகின்றன.
கொழுப்பில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் தகவல் பரிமாற்ற உபகரணங்களுக்கும், பிராந்திய ஊடகவியலாளர்களின் உபகரணங்களுக்கும் வேறுபாடுகள் இருக்கக்கூடும்.
பிரதேச ரீதியிலான ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஒரு சங்கமாக தமது பிரச்சனைகளை எழுத்து மூலம் முன்வைக்கலாம் என்கின்ற ஒரு யோசனையை நான் முன் வைக்கின்றேன்.
பிரதேச ரீதியிலான ஊடகவியலர்களுக்கு பிரச்சனைகள் பல இருப்பதை நான் காண்கின்றேன். ஊடகவியலாளர்கள் யார்? என்ன தன்மையை கொண்டிருப்பார்கள் என்ற கேள்வி எங்களிடமும் இருக்கின்றது. எங்களால் முடிந்த சேவைகைளையும், சலுகைகளையும் வழங்குவதற்கு நாங்கள் முயல்வோம்.
பல்வேறு துறையினருக்கும் காணிகள் வழங்குவது தொடர்பாக நான் கொண்டிருக்கும் கருத்து சற்று வேறுபாடானது. எமது நாட்டின் சனத்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காணிகள் பெருகுவதில்லை. ஆகவே ஒவ்வொரு துறையினரும் கேட்கின்ற காணிகளை வழங்குவது சாத்தியமான விடயமல்ல.
அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் பார்க்க வேண்டும். அங்கு குடியிருப்புக்களுக்காக தொடர் மாடி வீடுகளை அமைத்துள்ளார்கள். அவ்வாறானதொரு முன்மொழிவுகளை முன் வைக்க விரும்புகின்றேன். ஊடகவியலாள்கள் மட்டுமன்றி பல மக்களும் வீடின்றி காணப்படுகின்றார்கள்.
இதனால் இதனை ஒரு பொதுப் பிரச்சினையாக காண்கின்றேன். ஆகவே ஊடகவியலாளகளின் பிரச்சனைகளை தீர்க்க திட்மிடப்பட்ட செயன்முறை ஒன்றை முன்னெடுக்க யோசித்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
வவுனியா தீபன்
No comments:
Post a Comment