மட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணிக்கான நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது - மாநகர சபை முதல்வர் சரவணபவன் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

மட்டக்களப்பு பொது நூலக நிர்மாணப் பணிக்கான நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது - மாநகர சபை முதல்வர் சரவணபவன்

மட்டக்களப்பில் அமைக்கப்பட்டுவரும் பொது நூலகத்தின் நிர்மாணப் பணிக்கான 216 மில்லியன் ரூபாய் நிதிப் பயன்பாட்டுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

பொது நூலகத்தின் நிர்மாணப் பணிகள் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டில் இடை நடுவில் நிறுத்தப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகக் கட்டட நிர்மாணத்தை முடிக்க வேண்டும் என நாங்கள் பதவியை ஏற்ற நாள் முதல் அதற்கான வேலைகளை ஆரம்பித்திருந்தோம்.

குறிப்பாக நாடாளுமன்ற அனுமதி மற்றும் தேசிய கட்டடங்கள் திணைக்களத்தின் அனுமதி என்பன பெற வேண்டியிருந்தது. குறித்த அனுமதிகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் முயற்சியில் கிடைத்தன. இந்த அனுமதிகளைப் பெற்றதோடு அமைச்சரவை அனுமதி 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி பெறப்பட்டது.

இதன் பின்னர், கட்டட நிர்மாணத்துக்காக 345 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மூலமாக 169.87 மில்லியனும் அப்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம ஊடாக மாகாண சபையிலிருந்து 100 மில்லியனும் மிகுதிப் பணத்தினை மாநகர சபையும் ஒதுக்குவதென்ற தீர்மானத்தில் 2019ஆம் ஆண்டு தேசிய கட்டடங்கள் திணைக்களத்துக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

தேசிய கட்டடங்கள் திணைக்களத்தினால் ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்ததாரர் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல், ஜனாதிபதி தேர்தல் போன்ற காரணங்களால் இழுபறி நிலை காணப்பட்டு ஒப்பந்ததாரருக்கான அமைச்சரவை அனுமதி காலதாமதமாகியதால் 2019 இல் இந்த வேலைகளை எம்மால் ஆரம்பிக்க முடியாது போனது.

தற்போது, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தின் மூலமாக முதல் தளத்தினை நிறைவுறுத்துவதற்காக 216 மில்லியன் ரூபாய் நிதிப் பயன்பாட்டுக்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே, மிக விரைவில் இந்தக் கட்டுமானம் ஆரம்பிக்கப்படும்.

தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் இந்த வேலையை சரியான முறையில் செய்து முடிப்பார் என நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல், இதை முழுமையாகக் கண்காணித்து அமுல்படுத்தும் நிறுவனமான தேசிய கட்டடங்கள் திணைக்களம் அந்தக் கட்டிட வேலைகளை எங்களுக்கு முறையாக முடிவுறுத்தித் தருவார்கள் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad