கழிவுகள் அடங்கிய பிரித்தானிய கொள்கலன்களை மீள அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு - News View

Breaking

Post Top Ad

Wednesday, October 14, 2020

கழிவுகள் அடங்கிய பிரித்தானிய கொள்கலன்களை மீள அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய 242 கொள்கலன்களை மீண்டும் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு கழிவுப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை தடை செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழாமினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை தாம் மீண்டும் பொறுப்பேற்பதற்கு தயாராகவுள்ளதாக, அவற்றை இலங்கைக்கு கொண்டு வந்த பிரித்தானிய நிறுவனத்தினால் கடிதமொன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த கொள்கலன்களை மீண்டும் கொண்டு செல்வதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன், இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்ததரவிட்டது.

Hayleys Free Zone தனியார் நிறுவனம், ETL Colombo தனியார் நிறுவனம், இலங்கை துறைமுக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், இலங்கை முதலீட்டு சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் சட்டமா அதிபர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் பிரித்தானியாவில் இருந்து 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

130 கொள்கலன்கள் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலும், 133 கொள்கலன்ள் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதியிலும் வைக்கப்பட்டன. 

இதில் 21 கொள்கலன்கள் SEAMAX NORWALK, (V/039R) கப்பலில் ஏற்றப்பட்டு கடந்த செப்டெம்பர் 26ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திலிருந்து பிரித்தானியாவுக்கு திருப்பியனுப்ப, இலங்கை சுங்கத் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதனையடுத்து, பிரித்தானியாவில் இருந்து 263 கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கு இலங்கை அரசாங்கம் 1.69 பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியது.

Basel சாசனத்தின் கீழ் இலங்கை வழக்கு தாக்கல் செய்துள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த விடயம் தொடர்பாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad