காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, October 16, 2020

காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுமந்திரன் தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களான, கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்களில், அக்காணிகளுக்குரிய விவசாயிகள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளுக்காக செல்லும்போது அரச திணைக்களங்களால் தடுக்கப்படுதல் மற்றும், அங்குள்ள தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள் அபகரிக்கப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கரைதுறைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன் மற்றும் கொக்குத் தொடுவாய் கமக்கார அமைப்பின் தலைவர் கி.சிவகுரு ஆகியோர் அடங்கிய குழுவினர் வவுனியா மாவட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் (16) இன்று எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து இக்காணிப் பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டிருந்தனர். 

இந்நிலையில் இச்சந்திப்பின் பின் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளிலே வாழ்ந்த தமிழ் மக்கள், கடந்த 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, பின்னர் 2012ஆம் ஆண்டு மீள் குடியேற்றப்பட்டிருந்தனர். அவர்களின் வயல் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் பேசியிருந்தோம். 

அந்தக் காணிகளுக்குரிய தமிழ் மக்கள் தற்போது பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்படுவதும், சிலருடைய காணிகள் அபகரிக்கப்பட்டு வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற பிரச்சினை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அப்பகுதி கமக்கார அமைப்பின் தலைவர் அடங்கிய குழுவினர் என்னைச் சந்தித்து முறையிட்டுள்ளனர். 

இப்பிரச்சினைதொடர்பில் வெவ்வேறு பிரிவுகளாக பார்வையிட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்திருக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad