பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் கொலையல்ல, தற்கொலைதான் என எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கடந்த ஜூன் 15ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததால், அந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் போதைப் பொருள் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு தகவல்கள் வெளிவந்தன.
பொலிவுட் நடிகர் சுஷாந்தின் காதலி ரியா, அவரைத் தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம் என அவரது தந்தை பீகார் பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
அதேபோல், ரியாவின் வட்ஸ்அப் உரையாடல்களின் அடிப்படையில் அவர் மீது போதை தடுப்புப் பிரிவு பொலிஸார் இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் ரியா, அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேநேரம், நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு 57 நாட்கள் கடந்தும் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் சிபிஐ அலட்சியமாகச் செயல்படுவதாக நடிகர் சுஷாந்த் தரப்பு வழக்கறிஞர் விகாஸ் சிங் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களின் கூற்றுப்படி, சுஷாந்த் கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பது 200 சதவிகிதம் உறுதியானது என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நடிகர் சுஷாந்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் மருத்துவ அறிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவர் சுதீர் குப்தா தலைமையிலான மருத்துவர்கள் குழு, தங்களது அறிக்கையை சிபிஐ யிடம் ஒப்படைத்திருக்கிறது.
அந்த அறிக்கையின்படி, நடிகர் சுஷாந்தின் மரணம் கொலையல்ல. தற்கொலைதான் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதையடுத்து, தற்கொலை என்ற கோணத்தில் சிபிஐ விசாரணையைக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சுஷாந்த் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா என்ற கோணத்திலும் வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment