தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முட்டுக் கொடுத்த போதும் ஒரு பாலத்தைக் கூட நிர்மாணித்துக் கொடுக்கவில்லை - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முட்டுக் கொடுத்த போதும் ஒரு பாலத்தைக் கூட நிர்மாணித்துக் கொடுக்கவில்லை - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முட்டுக் கொடுத்த போதும் அவர்கள் ஒரு பாலத்தைக் கூட தமிழ் மக்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கவில்லை, மஹிந்த அரசாங்கமே எப்போதும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினாவின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கிளிநொச்சி - முல்லைத்தீவு ஏ-50 பிரதான வீதியில் அமைந்துள்ள 402 மீற்றர் நீளமான வட்டுவாகல் பாலம் இதுவரை புனரமைக்கப்படாமை தொடர்பான கேள்வியொன்றை எழுப்பினார், இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ. 

வட்டுவாகல் பாலம் புனரமைப்புத் தொடர்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அது முடிவடைந்தவுடன் நிதி ஒதுக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் பாலம் புனரமைக்கப்படும் என்றார். 

இதன்போது இடையீட்டுக் கேள்வியை எழுப்பிய சார்ள்ஸ் நிர்மலநாதன், நான் கடந்த அரசின் போதும் இக்கேள்வியை பல தடவைகள் கேட்டுள்ளேன். ஆனால் நீங்கள் இப்போதுதான் திட்டம் தயாரிக்கப்படுகின்றது என்கிறீர்கள் அப்படியானால் இந்த திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்றாவது உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா எனக் கேட்டார். 

இதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளிக்கையில், கடந்த அரசில் நீங்கள் பல தடவைகள் கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றால் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கொடுத்து ஆதரவளித்த அரசின் தவறு. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முட்டுக் கொடுத்த போதும் அவர்கள் ஒரு பாலத்தைக் கூட உங்களுக்கு நிர்மாணித்துக் கொடுக்கவில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசு அதற்கான திட்டங்களை தாயாரித்து வருகின்றது. 

2 வருடங்களுக்குள் பாலத்தை புனரமைத்து தருவோம் என்று உறுதி வழங்குகின்றது. மஹிந்த அரசாங்கம் எப்போதும் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியை வழங்கும் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment