(எம்.மனோசித்ரா)
மினுவாங்கொடை, பேலியகொடை ஆகிய இரு கொத்தணிகளுக்கிடையில் தொடர்புகள் இருப்பதாக தொற்று நோயியல் பிரிவு கூறினாலும், என்ன தொடர்பு என்பது இதுவரையில் தெளிவுபடுத்தப்படவில்லை. அத்தோடு அதன் பின்னர் தோன்றியுள்ள கிளை கொத்தணிகள் குறித்தும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே சமூகப்பரவல் ஏற்படவில்லை எனக் கூறும் தொற்று நோயியல் பிரிவு அதன் உண்மை தன்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று அரச மருத்து அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை வலியுறுத்தினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த சில தினங்களில் பெரும்பாலான தொற்றாளர்கள் சமூகத்திலிருந்தே இனங்காணப்படுகின்றனர். அவ்வாறிருக்கின்ற போதிலும் தொற்று நோயியல் பிரிவு நாட்டில் சமூக தொற்று ஏற்படவில்லை என்று கூறுமாயின், அடுத்த கட்டமாக சமூகப் பரவல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொவிட் கட்டுப்படுத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் வைரஸ் பரவலானது சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது என நம்புகின்றோம். நாட்டில் மிகச் சிறந்த சுகாதாரத் துறையும் பாதுகாப்பு துறையும் உள்ளது.
எனினும் சில தீர்மானங்கள் எடுக்கும் போது வீணாக கால தாமதம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே வைரஸ் பரவல் கட்டுப்படுத்தலில் நெருக்கடி ஏற்படுகிறது.
எனினும் தற்போதுள்ளதைப் போன்று தொடர்ந்தும் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமாயின் அனைவரதும் ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு அண்மையில் இடம்பெற்ற சில திடீர் மரணங்கள் உள்ளிட்டவை குறித்த உண்மையான தகவல்களை உரிய தரப்பினர் வெளிப்படுத்த வேண்டும்.
உண்மையான தகவல்களை வெளிப்படுத்துவது குறித்து தொற்று நோயியல் பிரிவுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகிறது.
No comments:
Post a Comment