ரிஷாட் பதியுதீனை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு! - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

ரிஷாட் பதியுதீனை தேடி கிழக்கு வரை சி.ஐ.டி. வலைவீச்சு!

தொடர்ந்து நான்காவது நாள் முயற்சியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நேற்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைத் தேடி கிழக்கு மாகாணம் வரை தேடுதல் வேட்டையினை முன்னெடுத்தது.

கொழும்பு, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்தது.

இதனைத் தொடர்ந்து, அவரைத் தேடி பொத்துவில், அம்பாறை, சம்மாந்துரை, நிந்தவூர் மற்றும் கல்முனை பகுதிகளில் உள்ள அவரது நெருங்கிய தொடர்புடையோர் வீடுகளிலும் சி.ஐ.டி.யினர் தேடுதலை நடத்தியிருந்தனர்.

அத்தோடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அம்பாறையில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரஃப் இல்லத்திலும் அருகில் உள்ள பொதுமக்கள்களின் வீடுகளிலும் தேடுதலை நடத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அரச பேருந்துகளில் புத்தளத்திலிருந்து மன்னாருக்கு மக்களை ஏற்றிச் சென்றமை தொடர்பாக அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீனை கைது செய்யச் சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் ரிஷாட் பதியுதீனை கைது செய்யப் பிடியாணை தேவையில்லை என்று நீதிமன்றம் அறிவித்ததில் இருந்து சில நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ரிஷாட் பதியுதீன் தலைமறைவாகினார்.

இதனை அடுத்து ரிஷாட் பதியுதீனை கைது செய்ய ஆறு தனி குழுக்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அதில் ஒரு குழு ரிஷாட் பதியுதீனின் கொழும்பு இல்லத்திற்கும் சென்று அவரது மனைவியிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad