கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரசு அனர்த்த நிலையை அடுத்து யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் அறிவுறுத்தவில்
1. அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிதல் வேண்டும்.
2. பணிபுரியும்போது இருவருக்கு இடையில் ஆகக்குறைந்தது ஒரு மீற்றர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.
3. நாளாந்தம் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் சேவை பெறுனர்கள் சவர்க்காரமிட்டு அல்லது தொற்றுநீக்கி திரவத்தினை பயன்படுத்தி முறைப்படி கை கழுவ வேண்டும்.
4. நாளாந்தம் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள் மற்றும் சேவை பெறுனர்களின் உடல் வெப்பநிலை அவதானிக்கப்படல் வேண்டும்.
5. வெளியிடங்களில் இருந்து சேவை நாடி வருபவர்களை சந்தித்த பின்பும் கட்டாயமாக சவர்க்காரமிட்டு அல்லது தொற்று நீக்கி பாவித்து கைகளை சுத்தப்படுத்த வேண்டும். சேவைநாடிகளுக்கு வழங்குவதற்கென தனியாக ஒரு பேனா வைத்திருப்பதுடன் அதனை தொற்று நீக்கியால் சுத்தப்படுத்திய பின்பே இன்னொருவருக்கு வழங்க வேண்டும்.
6. அலுவலக உத்தியோகத்தர்களுக்கு காய்ச்சல், தொண்டை நோ, மூக்கால் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் விடுமுறையில் வீட்டில் இருப்பதுடன் மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும்.
7. மேலதிகமான விளக்கங்களுக்கு திணைக்கள மற்றும் நிறுவனத் தலைவர்கள் வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், சுகாதார அமைச்சினால் 2020 ஏப்ரல் 17ம் திகதி உபவழிகாட்டி அறிவுறுத்தல்களாக வெளியிடப்பட்ட 'வேலைத்தளங்களில் கொவிட்-19 பரவுவதற்கான முன்னாயத்தங்கள் மற்றும் பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செயற்பட்டு வழிகாட்டுதல்கள்' எனும் சுற்றறிக்கையினை சுகாதார அமைச்சின் இணையத்தளத்தினூடாக பார்வையிடவும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment