காடழிப்பு உள்ளிட்ட சூழல் பாதிப்புக்கள் குறித்து முறைப்பாடளிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - ஆதரத்தை காண்பித்து நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன் என்கிறார் மஹிந்த அமரவீர - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

காடழிப்பு உள்ளிட்ட சூழல் பாதிப்புக்கள் குறித்து முறைப்பாடளிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் - ஆதரத்தை காண்பித்து நிரூபித்தால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவேன் என்கிறார் மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா) 

சுற்றுச்சூழல் பாதிப்புக்கள் குறித்து அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகிறது. அதற்கமைய சட்ட விரோதமாக இடம்பெறும் காடழிப்பு உள்ளிட்ட சூழல் பாதிப்புக்கள் குறித்து முறைப்பாடளிப்பதற்கு 1991, 1981 மற்றும் 1921 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

சுற்றாடல் அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாடளாவிய ரீதியில் எந்த பகுதிகளில் சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

சுற்றாடல் அமைச்சினால் 1991 என்ற இலக்கமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் 1981 என்ற இலக்கமும், புவி சரிதவியல் திணைக்களத்தினால் 1921 என்ற இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் புவி சரிதவியல் திணைக்களம் என்பவை முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால் எனக்கு நேரடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். 

காடழிப்பு தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது தரப்பினரால் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவர்களிடம் உண்மையான ஆதரங்கள் இருக்குமாயின் என்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றேன். 

திஸ்ஸமகாராமையில் - விலமுல்ல பிரதேசத்தில் 30 ஏக்கர் நிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்தரப்பினர் சிலர் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆதரத்தை காண்பித்து அதனை அவர்கள் நிரூபிப்பார்களாயின் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலக தயாராகவுள்ளேன். 

சட்ட விரோத காடழிப்பு தொடர்பில் சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதோடு, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்காக கிராம மட்டத்திலிருந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேவேளை நாட்டிலுள்ள 103 ஆறுகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனவே பாரதூரமான வகையில் சுற்றாடல் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad