பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள வீடொன்றில் கத்திக் குத்து மற்றும் சுத்தியலால் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியான நொய்ஸி-லெ-செக்கில் உள்ள வீடொன்றிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை காலை 11 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களும் சந்தேக நபரும் உயிரிழந்தவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கை வம்சாவளியினர் எனக் கூறுப்படுகிறது.
பலத்த காயம் மற்றும் மயக்க நிலையில் காணப்பட்ட ஒருவர் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டு கிளிச்சியில் உள்ள பியூஜோன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சம்வம் நடைபெற்றவுடன் குறித்த வீட்டிலிருந்து தப்பி வந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு சென்று, தனது மாமாவுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும், அவர் தனது குடும்பத்தின் மற்றவர்களை கத்தி மற்றும் சுத்தியலால் தாக்கியதாகவும் மதுபானசாலை மேலாளரிடம் கூறி உதவியை நாடியுள்ளான்.
அதன் பின்னர் பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த நிலையில் ஐவரையும், பலத்த காயமடைந்து மயக்கமுற்ற நிலையில் மேலும் ஐவரையும் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் இருந்ததாக தெரிவித்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர் அனைவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என உறுதிப்படுத்தினர்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், அவரது பக்கத்திலிருந்து கத்தி மற்றும் சுத்தியல் என்பவை மீட்களப்பட்டுள்ளதாகவும் பின்னர் அவர்கள் அனைவரும் பாரிஸின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment