பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு - அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே தோற்றும் வசதி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 8, 2020

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு - அவர்கள் வசிக்கும் மாவட்டங்களிலேயே தோற்றும் வசதி

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அவர்கள் தற்போது வசிக்கும் மாவட்டங்களிலேயே பரீட்சைக்குத் தோற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி எம்.பி முஜீபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டு கல்வி பொதுத் தராதர உயர்தர கல்வியை தமிழ் மொழி மூலம் தொடரும் பெருமளவிலான மாணவர்கள் குருணாகல், கண்டி மற்றும் கிழக்கு மாகாணங்களில் விடுதிகளில் தங்கி கல்வி செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அவர்கள் தற்போது தங்களது வீடுகளுக்கு வந்திருக்கின்றனர். இவ்வாறான நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறித்த திகதியில் இடம்பெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், கம்பஹா மாவட்ட மாணவர்கள் அவர்கள் கல்வி கற்ற பிரதேசங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்றுவதற்குரிய சூழ்நிலை நாட்டில் காணப்படவில்லை. 

அதனால் குறிப்பாக கம்பஹா மாவட்ட மாணவர்கள் அவர்கள் இருக்கும் இடங்களிலேயே உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென முஜிபூர் ரஹ்மான் எம்.பி சபையில் கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளிக்கையிலே கல்வி அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். 

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னுமொரு மாவட்டத்துக்கு சென்று பரீட்சை எழுதுவதை தவிர்த்து மாணவர்கள் இருக்கும் மாவட்டங்களிலே பரீட்சைக்கு தோற்ற முடியுமான ஏற்பாடுகளை மேற்கொள்ள தற்போது நாம் முயற்சிக்கின்றோம்.

கொரரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றோம்.

குறிப்பாக கம்பஹா மாவட்ட மாணவர்கள் அவர்கள் வசிக்கும் இடங்களிலேயே பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம் ஷம்ஸ் பாஹிம்

No comments:

Post a Comment