கொவிட்-19 பரவல் நிலையை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் சுகாதார நிலைமை உள்ளிட்ட பிற தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மாணவர்களின் தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் பத்திரத்தில் சேர்க்க வேண்டும் என, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் info.moe.gov.lk என்னும் இணையத்தளத்தின் ஊடாக மாணவர்கள் தகவல்களை பதிவிட முடியும் எனவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு இதற்கான படிவம் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பரீட்சை திணைக்களத்தினால் பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரியிடம் வழங்குவதற்காக வலய மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இணையவழியூடாக தகவல்களை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்கள் இந்த படிவத்தில் (ஒரு மொழியில்) பூரணப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும்.
அத்தோடு இதில் பதிவாகும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரதேசத்தின் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்று அனைத்து மாகாண வலய கல்வி பணிப்பாளர்களுக்கும், பரீட்சை மத்திய நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பரீட்சாத்திகளினால் முழுமைப்படுத்தப்பட்ட தகவல்களின் இரகசிய தன்மையை பாதுகாப்பதற்கு கல்வி அமைச்சு முன்னிற்கின்றது. கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களின் தகவல்கள் உள்ளீர்க்கப்படுவது அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதேபோன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் பெற்றோரினால் இந்த தகவல்கள் முழுமைப்படுத்தப்பட வேண்டும். முதலில் தகவல்களை உள்ளீடு செய்த பின்னர் தனது அல்லது தமது குடும்பத்தவரின் உடல் நிலைமையில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அவ்வாறான சந்தப்பத்தில் மீண்டும் தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும்
க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு இம்முறை தோற்றவுள்ள சகல மாணவர்களும் பாதுகாப்பான முறையில் பரீட்சைகளுக்கு தோற்றும் வகையில் கல்வி அமைச்சு விசேட கவனம் செலுத்தி வருவதோடு, தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள மாணவர்களும், வேறு பிரதேசங்களிலிருந்து கம்பஹா மாவட்டத்திற்கு வருகை தரும் மாணவர்களும் இது தொடர்பில் அதிக கவனம் எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும், கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயினும், குறித்த தகவல்களை வழங்காது பரீட்சைகளுக்கு தோற்றுவதில் எவ்வித தடங்கலும் இல்லை என, சகல மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment