“சஹ்ரானும் அவரது குழுவினரும் தொடர்புபட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கவில்லை” - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 1, 2020

“சஹ்ரானும் அவரது குழுவினரும் தொடர்புபட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கவில்லை” - முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி

“தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளரும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிலந்த ஜெயவர்தன தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் சஹ்ரான் குழுவினரால் கடந்த வருடம் ஏப்ரல் 16 ஆம் திகதி காத்தான்குடியில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் குண்டு வெடிப்பின் பின்னர் எனக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அது குறித்து தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார். ஆனால் அந்தத் தாக்குதலில் சஹ்ரானும் அவரது குழுவினரும் தொடர்புபட்டுள்ளதாக எனக்கு அறிவிக்கவில்லை” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பொ்னாண்டோ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் இச்சம்பவம் குறித்து வினவப்பட்டபோது, “நான் சம்பவம் பற்றி அறிந்திருந்தேன். ஆனால் சஹ்ரானும் அவனது குழுவினரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக எனக்குத் தெரியாது” என்றார்.

நிலந்த ஜயவர்தன எனக்கு தாக்குதலுடன் தொடர்புட்ட சில புகைப்படங்களை வட்ஸ்அப் ஊடாக அனுப்பினார். அவை தெளிவான புகைப்படங்களாக இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் 2019 ஜனவரி 16 ஆம் திகதி வண்ணாத்திவில்லில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தொகை வெடி பொருட்கள் பற்றியும் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “இவ்விடயம் குறித்து வெவ்வேறு புலனாய்வாளர்களால் அறிக்கையிடப்பட்டது. அதிக வெடி பொருட்கள் வெவ்வேறு இடங்களில் சேமிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை குறித்து எந்த ஒரு பாதுகாப்புப் படையாலும் அறிவிக்கப்படவில்லை” என்றார்.

2019 பெப்ரவரி 19 இல் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் இச்சம்பவம் குறித்து கலந்துரையாடப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

தினக்குரல்

No comments:

Post a Comment