அர்மீனியா - அசர்பைஜான் நாடுகள் இன்று நள்ளிரவு முதல் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் - News View

Breaking

Post Top Ad

Sunday, October 18, 2020

அர்மீனியா - அசர்பைஜான் நாடுகள் இன்று நள்ளிரவு முதல் புதிய போர் நிறுத்த ஒப்பந்தம்

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் இடையிலான புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.

சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினையில் அஜர்பைஜான் மற்றும் அர்மீனியா நாடுகளுக்கு இடையில் கடந்த மாத இறுதியில் பயங்கர மோதல் வெடித்தது. 

இரு தரப்பு ராணுவமும் கடுமையாக மோதிக் கொண்டதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் அப்பாவி மக்கள் பலரும் பலியாகினர். 

அதனை தொடர்ந்து ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த வாரம் அங்கு சண்டை நிறுத்தம் அமுலுக்கு வந்தது. ஆனால் சண்டை நிறுத்தத்தை மீறி இரு நாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த போர் நிறுத்த மீறலுக்கு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுகின்றனர். நேற்றும் குடியிருப்பு பகுதி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா மோதல் தொடர்பாக நாளை (திங்கட்கிழமை) ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே போர் நிறுத்தம் தொடர்பான புதிய உடன்படிக்கைக்கு இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. மனிதாபிமான அடிப்படையிலான இந்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad