(சர்ஜுன் லாபீர்)
எமது சமூகத்தின் ஒரு அடித்தளமாக விசேட தேவையுடையோர் காணப்படுகின்றார்கள் என்பதோடு அவர்களை வளப்படுத்துவது நமது இன்றியமையாத கடமையாகும் என அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ.எம்.லத்தீப் தெரிவித்தார்.
மருதமுனை ஹியுமன்லின்க் நிறுவனத்தின் சுகாதார பராமரிப்பு நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (3) மருதமுனை ஹியுமன்லின்க் பணிப்பாளர் ஏ. கமருத்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கூறியவாறு குறிப்பிட்டார்
அவர் தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்துகையில் இன்றைய நிகழ்வு என்பது மருதமுனைக்கு ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும் இரண்டு விடயங்கள் நான் குறிப்பிட வேண்டும் ஒன்று இந்த வாரம் என்பது சிறுவர்கள் மற்றும் முதியவர்களை சிறப்பிக்கின்ற வாரமாக இருக்கின்றது. அடுத்து மருதமுனையில் விசேட தேவையுடையவர்களுக்கான நிலையம் ஒன்று இயங்கி மாணவர்களுக்கான வளப்படுத்தல் செயற்பாட்டினை ஆற்றுதல் என்பது ஒரு முக்கிய செயற்பாடாக பார்க்கப்பட வேண்டி உள்ளது.
இலங்கையை பொறுத்த வரையில் மருதமுனை கிராமத்தில் கல்வியியலாளர்கள் கூடுதலாக உள்ள ஒரு கிராமம் ஆகும். இந்த ஹியுமன்லின்க் நிறுவனம் மிகவும் சிரமப்பட்டு கரடுமுரடான பாதைகளை கடந்து தங்களது இலக்குகளை அடைந்து இருக்கின்றார்கள் என நினைக்கின்றேன் இவர்களின் இந்த முன்னேற்றகரமான செயற்ப்பாடுக்கு மாவட்ட செயலகம் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
அதேநேரம் இவ்வாறான ஒரு வளப்படுத்தல் நிலையம் என்பது சமூகத்தின் ஒரு அடித்தளமாக அல்லது கட்டுமானமாக உள்ளது. பொதுவாக அரசாங்கத்தினை பொறுத்த வரையில் சமூதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்குகின்ற கடமைப் பொறுப்பு என்பது அரசாங்கத்திற்கு இருக்கின்றது. தனி மனிதன் பொருளாதார ரீதியாக ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வுகளை வரி மற்றும் ஏனைய முறைகள் மூலமாக நீக்கி விடமுடியும்.
ஆனால் விசேட தேவையுடையோர்கள், இயலாதவர்கள், இயலுமானவர்களுக்கிடையிலான வித்தியாசத்தை நீக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியமாக உள்ளது. ஏனென்றால் விசேட தேவையுடையவர்களை பொறுத்த வரையில் அவர்கள் சமூகத்தில் நிமிர்ந்து நிற்க இயலாமல் உள்ளார்கள் என்பதைத்தான் நாம் எல்லோரும் கோடிட்டு காட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம். அந்தடிப்படையில் அதற்காக சேவையாற்றும் நிறுவனங்களின் பங்களிப்புகள் என்பது மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லோரும் பொதுவாக தங்களுடைய தேவைகளை நிவர்த்தி செய்வதில்தான் மும்முரமாக செயற்படுகின்றோம் ஆனால் விசேட தேவையுடையவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களை சமூகத்தில் ஒரு அங்கமாக காட்டுவதில் நாம் எல்லோரும் முன்வரவேண்டும்.எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், விசேட இயன் மருத்துவ நிபுணர் எம்.ஏ.சி.எம் பறக்கத்துல்லாஹ்,கல்வியாளர்கள் பெற்றோர்கள்,விசேட தேவையுடைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment