திவுலபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண், காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு குணமடைந்து அவர் வீட்டிற்குச் செல்லும் வேளையில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கம்பஹா வைத்தியசாலையின் அலுவலக பணியாளர்கள் சுமார் 15 பேரும், அப்பெண்ணுடன் தனியார் நிறுவனமொன்றில் பணி புரிந்து வந்த சுமார் 40 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அப்பெண்ணுடன் பழகியவர்களை இன்னும் அடையாளம் கண்டு வருவதோடு, அப்பெண் எவ்வாறு கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டார் என்பது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வேளையில் பொதுமக்களை மிகவும் இறுக்கமாக சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும், சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திவுலபிட்டி மற்றும் மினுவாங்கொடை பிரதேசங்களில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்தோடு, அப்பிரதேசங்களினுள் உள்நுழைதல், வெளியேறுதல் மற்றும் அப்பிரதேசங்களின் ஊடாக பயணித்தல் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment